நிலப் பரிமாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்த குழு: அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 16 அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

நிலப் பரிமாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் நிலப் பரிமாற்றக் குழு ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று (ஆக. 31) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:

1. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் மின்தூக்கி வசதியுடன் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மற்றும் இதர அலுவலகக் கட்டிடங்கள் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் கட்டுதல்.

2. விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் ரூ.72 கோடி மதிப்பீட்டில் கட்டுதல்.

3. மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டிடங்கள் ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் கட்டுதல்.

4. ஐந்து புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 8 புதிய வருவாய் வட்டாட்சியர் குடியிருப்புகள் ரூ.26.88 கோடி மதிப்பீட்டில் கட்டுதல்.

5. விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல்.

6. 'அ' பதிவேடு, சிட்டா, புலப்படம் ஆகிய நில ஆவணங்களை சாகுபடி, நில பயன்பாடு விவரங்களை உள்ளடக்கிய இணைய வழி அடங்கல் ஆவணங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலமாக நில உரிமைதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்குதல்.

7. புல எல்லையை அளந்து காட்டக் கோரி பொதுமக்கள் எங்கிருந்தும் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்துதல்.

8. மத்திய நில அளவை அலுவலகம் மற்றும் நிலவரித் திட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களை ஒளிபிம்ப நகல் எடுத்து பராமரிப்பதற்காகவும் மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்தவும் ரூ.8.74 கோடி மதிப்பீட்டில் மென்பொருள் உருவாக்குதல்.

9. முறையற்ற நிலப் பரிவர்த்தனைகளைத் தடுக்கும் வகையில், இணையவழி சேவையில் உள்ள நில ஆவணங்களைப் பிற அரசுத் துறைகள், நீதிமன்றங்கள், பாதுகாப்புத்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்தல்.

10. பேரிடர் மேலாண்மைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 38 வருவாய் அலுவலகங்களுக்கு மின்னாக்கி வழங்குதல்.

11. மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 14 வட்டாட்சியர் பணியிடங்களைத் துணை ஆட்சியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்துதல்.

12. பேரிடர் மேலாண்மையில் மக்களின் ஈடுபாட்டைப் பெருக்கிடும் வகையில், 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 65,000 பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.

13. வெள்ள பாதிப்பு தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வறட்சி நிலையினைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மழையளவு கண்காணிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த குறுவட்ட அளவில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தானியங்கி மழைமானிகள் ஏற்படுத்துதல்.

14. நில எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்திடவும் நில உரிமையாளர்களுக்குச் சரியான இழப்பீட்டுத் தொகையினை விரைவாக வழங்குவதை உறுதி செய்திடவும் மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்துதல்.

15. அரசு மற்றும் கல்வி, தொழில் நிறுவனங்கள் இருவரும் பயன்பெறும் வகையில் நிலப் பரிமாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் நிலப் பரிமாற்றக் குழு ஏற்படுத்துதல்.

16. நிலம் சார்ந்த பணிகளைக் கணினிமயமாக்குவதற்காக, தொடர்புடைய பணியாளர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கணினிகள், பிரிண்டர்கள், நகலெடுப்பான்கள் ஆகியவை வழங்குதல்.

இவ்வாறு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE