கஞ்சா விற்பனையைப் புதுச்சேரி, காரைக்காலில் தடுக்கப் பேரவையில் எழுந்து நின்று அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் வலியுறுத்தினர். கடும் சட்டத்தின் மூலம் தடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி தந்தார்.
புதுவை, காரைக்காலில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடப்பது தொடர்பாக பேரவையில் இன்று நடந்த விவாதம்:
பிஆர்.சிவா (சுயேச்சை): புதுவை, காரைக்காலில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம் (பாஜக): குற்றப்பிரிவு போலீஸார் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக உள்ளனர். பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிவதால் குற்றவாளிகளுடன் போலீஸார் தொடர்பில் உள்ளனர். வெளிமாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகம் அருகே விற்கப்படுகிறது. கஞ்சா பொட்டலம் ரூ.30க்கு எளிதாகக் கிடைக்கிறது.
ஜான்குமார் (பாஜக): கஞ்சா விற்பவரிடம் போலீஸார் லஞ்சம் பெறுவதால்தான் விற்பனை அதிகரிக்கிறது. ஒரு கிராம் கஞ்சா வைத்திருந்தாலே 6 மாதம் உள்ளே தள்ளுங்கள். கடுமையான தண்டனை கொடுத்தால்தான் விற்பனையைத் தடுக்க முடியும்.
அனிபால் கென்னடி (திமுக): கஞ்சாவை சிறுவர்கள் விற்பதால் சமூக விரோதிகள் தப்பி விடுகின்றனர்.
சம்பத் (திமுக): போலீஸார் பலரும் 6 முதல் 9 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணி செய்கின்றனர். அவர்களுக்கு கஞ்சா எங்கு விற்கப்படும் என்பது தெரியும். எந்த சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டால் தண்டனை கிடைக்கும் என்றும் தெரியும். சமீபத்தில் தமிழகத்தில் சட்டத்தைக் கடுமையாக்கிவிட்டனர். இதனால்தான் புதுவையில் விற்பனையை அதிகரித்துள்ளனர்.
நாஜிம் (திமுக): பள்ளி, கல்லூரி அருகில்தான் விற்பனை செய்கின்றனர். கஞ்சா விற்பவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வைத்தியநாதன் (காங்): கஞ்சா குடித்துவிட்டு இளைஞர்கள் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு மரணமும் நிகழ்கிறது.
நேரு (சுயேச்சை): குடிசைப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சாதான் காரணமாக உள்ளது.
புதுவை, காரைக்காலில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடப்பது குறித்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசினர். ஆளும் கட்சி வரிசையிலும் உறுப்பினர்கள் எழுந்து பேசினர். இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பமாக இருந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று முதல்வரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர் அமைதியாக இருந்தார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா, "கஞ்சாவால் கொலைகள் தொடங்கி பல சம்பவங்கள் நடக்கின்றன. இளைஞர் சமுதாயம் பாதிக்கப்படுவதால் முதல்வர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "எம்எல்ஏக்களின் எண்ணம் புரிகிறது. புதுச்சேரியில் கஞ்சா விற்பனையால் பலரும் வீணாகிப் போவது பற்றிய உணர்வைத் தெரிவித்தனர். அது உண்மை. கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருகிறது. சிறுவர்கள் விற்பனை செய்கிறார்கள். சிறுவயதில் வீணாகிறார்கள். விபத்தும் நடக்கிறது. கடுமையான சட்டம் வாயிலாக, யார் விற்றாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அனைத்துச் சட்டங்களும் பாயும். கடும் சட்டத்தின் மூலம் கஞ்சா தடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago