புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 31) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலுமாகத் தடுக்கப்படும்; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அளித்துள்ள இந்த பதில் வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சீரழிக்கும் சக்திகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் முதலிடத்தில் உள்ளன என்பதை எவராலும் மறுக்க இயலாது. மதுவின் தீமைகளைப் போலவே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் தீமைகளுக்கு எதிராகவும் பாமக தொடர்ந்து போராடி வருகிறது.
» ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது
» ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு: அதிமுக வெளிநடப்பு
குட்காவின் தீமைகளை உணர்ந்து இருந்ததால்தான் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வகை செய்யும் சட்டத்தை பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்தார். அச்சட்டத்தைப் பின்பற்றித்தான் நாட்டில் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக குட்கா தடை செய்யப்படாத நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கடிதங்களை எழுதியதைத் தொடர்ந்தே, 2013-ம் ஆண்டு மே 8-ம் தேதி தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது.
ஆனாலும், இப்போதும் கூட சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குட்கா மட்டுமின்றி மிக மோசமான உடல்நல பாதிப்புகளையும், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் கிடைக்கின்றன.
குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களும், வெளிமாநில மாணவர்களும் அதிக அளவில் பயிலும் கல்வி நிறுவனங்களில் இத்தகைய போதைப் பொருட்கள் கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியை இழந்த மாணவர்கள் ஏராளம். கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியரின் தற்கொலைகளுக்கு இதுவே காரணமாகும்.
இத்தகைய சூழலில் முதல்வர் அறிவித்துள்ள புதிய சட்டத் திருத்தம் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். இதற்கான சட்டத்தை நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி, கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர் உள்ளிட்ட இளைய தலைமுறையினரை போதைப் பொருள் சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டும்தான் மாணவர்களைச் சீரழிக்கின்றன என்று கூற முடியாது. அவற்றுக்கு இணையாகப் புகையிலைப் பொருட்களும் மாணவர்களைச் சீரழிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலைக்கு பலியாகின்றனர்; புகையிலைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன்தான் சிறுவர்கள் மீது புகையிலைப் பொருட்களை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் திணிக்கின்றன.
பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தடை மதிக்கப்படவில்லை. மாறாக, மாணவ, மாணவியரின் கண்களில் எளிதில் படும் வகையிலும், மாணவர்களே எளிதில் எடுத்துக்கொள்ளும் வகையிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைக் கடைகளில் அவற்றின் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.
குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுப்பதில் காட்டும் அதே அக்கறையை சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு காட்ட வேண்டும். புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களைக் காப்பாற்றுவதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி தமிழக அரசு பயணிக்க வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago