மூன்று வேளாண் சட்டங்களும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளைக் காப்பாற்றவும் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசால் சொல்லப்படும் மூன்று வேளாண் சட்டங்களும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கிறது என்றே விவசாயிகள் சொல்லி வருகின்றனர்.
» வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்: அதிமுக வெளிநடப்பு
» மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: பாஜக வெளிநடப்பு
அதனை உணர்த்துவதற்காகக் கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு எழுச்சிமிகு போராட்டம் நிகழ்ந்தது கிடையாது. இவ்வளவு காலம் நீடித்ததில்லை எனும் சொல்லத்தக்க அளவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசின் மரியாதை இதுதானா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்து நிற்கிறது. இந்தச் சூழலில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நம் நாட்டில் வைத்துள்ளோம். இதன் நோக்கத்தையும் செயல்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு, இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயத்துக்கு, எந்த மாநில அரசோடும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது. அதனால்தான் அந்தச் சட்டங்களை நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது.
இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன. கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைக்கப்படுகிறது. இதனால்தான் இந்த 3 சட்டங்களையும் நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது. மத்திய அரசு 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பின்வரும் 3 வேளாண் சட்டங்களை இயற்றியிருக்கிறது.
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
இந்த 3 சட்டங்களும் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் எதிரானவைதான். விவசாயிகள் இந்த நாட்டிலிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நெற்றி வியர்வையைச் சிந்தி தாம் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.
ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை என்பதைக் குறைந்தபட்ச வார்த்தைக்குக்கூட பேசாத சட்டங்கள்தான் இந்த 3 சட்டங்களும். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, பல ஆண்டுகளாக விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில், பெரும் பங்காற்றிவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நோக்கத்தைக் குறைக்கிறது. மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்லும் வர்த்தகப் பகுதி என்பது தெளிவான வரையறைக்கு உட்படுத்தப்படவில்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு இது பெருமளவிலே வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனால், விவசாயிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியாத நிலை ஏற்படும். மத்திய அரசின் இந்தச் சட்டத்தினால் மாநில விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பது உறுதியாகிறது.
இரண்டாவதாக, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. இந்தச் சட்டம் தனியார் கூட்டாண்மை நிறுவனங்களை மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து விடுவிப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது நன்கு உறுதியாகிறது. இந்தச் சட்டத்தினால் லாபகரமான விலையை, விவசாயிகள் கேட்டுப் பெற முடியாத நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல், தங்கள் நில உடைமை உரிமைகள் பறிபோகும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது விவசாயிகளை விட விளைபொருட்களை வாங்கும் தனியாருக்கே சாதகமாக இருக்கும். இடுபொருட்களின் விலையும் விளைபொருளுக்கான விற்பனை விலைக்கு இணக்கமாக இருக்காது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தடுக்கவும் இச்சட்டத்தின் கீழ் வழியில்லை. இச்சட்டம் விளைபொருளைக் கொள்முதல் செய்யும் தனியாருக்கே சாதகமாக இருக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. இதன்படி விளைபொருட்கள் சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும். விளைபொருட்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காது. ஆனால், சந்தையில் செயற்கையான விலையேற்றம் ஏற்படும். இத்திருத்தச் சட்டம் மூலம் விவசாயிகள் எவ்விதப் பயனையும் அடையப்போவதில்லை.
இப்படி இந்த 3 சட்டங்களுமே வேளாண்மைக்கு எதிரானதாகவும், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்குப் பாதகமானதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த அரசு கண்ணில் வைத்துப் போற்றும் விவசாயிகளின் நலன்களை என்றென்றைக்கும் பாதுகாத்திடவும், அவர்தம் வாழ்வில் செழிக்கவும், வேளாண்மைப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் தடுக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்துள்ள மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும், ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி, ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு ஆக. 9 முதல் இன்றுவரை விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களின் அறவழிப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகளின் வாழ்வு செழிக்கவும், இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இந்த மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. வேளாண்மைத் துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த 3 சட்டங்களும் வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ரத்து செய்யப்பட வேண்டும் என, இந்த சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago