தமிழகம், புதுச்சேரியில் 4 நாள் மழை பெய்யும்- தேனி, நீலகிரி, கோவையில் அதிகனமழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 28, 29-ம் தேதிகளில் (இன்றும் நாளையும்) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும்.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். 29-ம் தேதி தென்காசி, மதுரை,திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.

30-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.31-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14செ.மீ., காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், ஆரணியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE