மியாட் மருத்துவமனையில் இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதிநவீன தொழில்நுட்பத்திலான ஆய்வகம்: துர்கா ஸ்டாலின் திறந்துவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதி நவீன தொழில்நுட்பத்திலான கேத் லேப் (இடையீட்டு ஆய்வகம்) நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை முதல்வர் மனைவிதுர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது, ஆய்வகத்தின் பயன்பாடு குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் துர்காஸ்டாலினிடம் விளக்கினார். மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடனிருந்தார்.

பின்னர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆஞ்சியோகிராம் சோதனை, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல், பக்கவாத சிகிச்சைகள், கல்லீரல் சிகிச்சைகள் போன்றவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் மேற்கொள்ள கேத் ஆய்வகங்கள் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் அத்தகைய வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒருபுறம் உயிர் காக்கும் முக்கியப் பங்கினை அந்த ஆய்வகங்கள் அளிக்கின்றன. அதே நேரத்தில் அவற்றால் சில எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. சிகிச்சை மற்றும் பரிசோதனைகளின்போது வெளியாகும் கதிர்வீச்சு, கான்ட்ராஸ்ட் டையின் பயன்பாடு ஆகியவை நோயாளிகளின் சிறுநீரகத்தையும், பிற உறுப்புகளையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்பனர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில்தான் கோன் பீம் சி.டி.ஸ்கேன், முப்பரிமாண எக்கோ, மென்பொருள் நுண்ணறிவு நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன கேத் ஆய்வகம் நாட்டிலேயேமுதன்முறையாக மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. பிற கேத் ஆய்வகங்களை ஒப்பிடும்போது, இங்கு வெளியாகும் கதிர்வீச்சின் அளவு பாதிக்கும் குறைவாகும். கான்ட்ராஸ்ட் டையின் பயன்பாடும் பாதிக்கும் குறைவாகவேஉள்ளது. இதனால் நோயாளிகளுக்கு எதிர்விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.

பரிசோதனை மேற்கொள்ளும்போதே எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதை மிகத் துல்லியமாகக் காட்டக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் இங்கு உள்ளன. இதனால், மிக விரைவாகவே பாதிப்பைச் சரி செய்ய முடியும். மற்ற கேத் ஆய்வகங்களில் குறைந்தது 2 மணி நேரம் வரை ஆகும் பக்கவாத சிகிச்சைகளை இங்கு அரை மணி நேரத்தில் மேற்கொள்ள முடியும்.

சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளை 5.2 விநாடிகளில் மேற்கொள்ள முடியும். அதேபோன்று இதய பாதிப்புகளுக்கான ஆஞ்சியோகிராம் சோதனை,ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை போன்றவற்றை மிக விரைவாகவும், துல்லியமாகவும் இந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளலாம். ஒரே இடத்தில் சி.டி.ஸ்கேன், எக்கோ மற்றும் சிகிச்சை தொழில்நுட்பங்கள் இருப்பதால் நோயாளிகளை அலைக்கழிக்க வேண்டிய அவசியமோ, நேரம் விரயமோ இல்லை. சிகிச்சைக் கட்டணத்தைப் பொருத்தவரை வழக்கமான கேத் ஆய்வகங்களுக்கான கட்டணம் மட்டுமே இங்கும் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மியாட் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்