ஒரு மாதம் பரோல் கோரிய நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் நளினிக்கு முழு உடல் பரிசோதனை

By செய்திப்பிரிவு

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோல் கோரிய நிலையில், வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கண் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கிறது. எனவே, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரி சிறைத்துறை நிர்வாகம் வழியாக முதல்வருக்கு நளினி கடந்த 23-ம் தேதி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில் நளினியின் உடல் நிலை பாதிப்பு குறித்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வேலூர் பெண்கள் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் நளினிக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், பெண்கள் தனிச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நளினி நேற்று காலை 9.45 மணிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு காது, மூக்கு, தொண்டை பிரிவிலும் கண், பல் மருத்துவப் பரிசோதனையுடன் பொது மருத்துவப் பரிசோதனை யாக சிறுநீரகம், ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதுடன் எக்ஸ்ரே, இ.சி.ஜியும் எடுக்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு மீண்டும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நளினி, பிற்பகல் 1.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிறைத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நளினி பரோல் கோரி பலமுறை மனு அளித்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவ சிகிச்சைக்காக பரோல் வேண்டும் என்று கோரியுள்ளார். எனவே, அவரது உடல் நிலை பாதிப்புகள் குறித்து விரிவான மருத்துவ அறிக்கை அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கை சிறைத்துறை வழியாக அரசுக்கு அனுப்பி பரோல் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE