ஆத்ம திருப்தியுடன் காவல் பணியை செய்யும் காவலர்களுக்கு தினமும் பரிசு: திருப்பத்தூர் எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தகவல்

By ந.சரவணன்

காவல் பணியை ஆத்ம திருப்தியுடன் செய்யும் காவலர்களுக்கு தினசரி வெகுமதி வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் முழு கவனமுடன் பணியாற்றாததால் தான் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதைத் தடுக்கவும், பணியில் மெத்தமாக உள்ள காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய உத்தியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தொடங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட காவல் நிர்வாகம் தினமும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு ரோந்துப்பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆலங்காயம் உதவி காவல் ஆய்வாளர் நாகபூசனம், நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் யுவராஜ், கோகுல், வாணியம்பாடி நகர காவல் நிலைய காவலர் குமரவேல் ஆகியோருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ரொக்கப்பரிசு வழங்கி அவர்களைப்பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘‘மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், விபத்து, குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக குவிந்துள்ளது. இதனால், காவல் நிலையங்கள் நெரிசலுடன் காணப்படுகிறது.

எனவே, இந்த வாகனங்களில் உரிமம் கோராத வாகனங்கள், சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், விபத்தில் சிக்கிய வாகனங்கள், குற்றவழக்கில் சிக்கிய வாகனங்கள் என்று பிரித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாகனங்கள் எடுத்துச் செல்ல நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கு நடக்கும் போது அந்தவாகனங்களை அவர்கள் கொண்டு வர வேண்டும். வழக்கு முடியும் போது உரிய அபராதம் செலுத்தி வாகனங்களை உரிய அனுமதியுடன் எடுத்துச்செல்லவும், அதை காவலர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 150 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இரவு ரோந்து செல்லும் காவலர்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் இதற்காக பொறுப்பாளர்களை நியமிக்கபட உள்ளனர். சிறப்பாக பணி செய்யும் காவலர்கள் நாள் தோறும் ரொக்கப்பரிசு வழங்கவும் திட்டமிட்டிருக்கிறோம். குற்றமில்லா நகராக மாற்ற பல புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறோம்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE