புதுச்சேரி வளர்ச்சிக்காக அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பை வழங்கும்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரி வளர்ச்சிக்காக அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆக.27) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் சிவா பேசியதாவது:

"புதுச்சேரியில் இந்தப் புதிய ஆட்சிக்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் பிரதமர், மத்திய அமைச்சர்கள் புதுச்சேரிக்கு வந்து நிறைய வாக்குறுதிகள் அளித்தனர். அதனால் இந்த பட்ஜெட்டிலும், ஆளுநர் உரையிலும் நிறைய எதிர்பார்த்தோம். முதல்வர் ரங்கசாமியும், மாநில அந்தஸ்தும், அதிக நிதியும் கிடைக்கும், மாநிலம் வளர்ச்சி பெறும் என்று கூறினார். ஆனால், ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. மின்துறை தனியார் மயம் குறித்தும் பதிலில்லை. மின்துறை மோசமான நிலையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? என்பதைத் தெரிவிக்கவில்லை.

புதுச்சேரியில் சுதேசி, பாரதி உள்ளிட்ட மில்களில் பணிபுரிந்து வந்த 10 ஆயிரம் பேர் வேலையின்றி முடங்கியுள்ளனர். மூடியுள்ள இந்த நிறுவனங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது, மாநில அரசின் கடனுக்காக வட்டி மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,800 கோடி கட்டப்படுகிறது. கடந்த ஆட்சியில் 4 ஆண்டுகளாகத் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்காமல் வீணாக்கினர். நாங்கள் சங்கடப்பட்டோம். தொகுதி வளர்ச்சிப் பணியைச் செய்ய முடியவில்லை. அதுதான் உங்கள் ஆட்சியிலும் தொடருமா? புதுச்சேரியில் ஊதியப் பிரச்சினையால், தற்போது அரசு வேலை கேட்டு யாரும் வருவதில்லை.

மின்சாரம், சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற வசதியைத்தான் மக்கள் கேட்கின்றனர். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் சிறப்பாக நடைபெறவும், புதுச்சேரி வளம்பெற வேண்டும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தொழிற்சாலையும் வரவில்லை. பல தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மத்திய அரசுடன் பேசி, சிறப்புச் சலுகை பெற்றுத் தந்தால்தான் புதிய தொழிற்சாலைகள் வரும். தொழில் கொள்கையை மாற்ற வேண்டும்.

புதுச்சேரியில் ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் இல்லை. பொழுதுபோக்குகளுடன் கூடிய புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி தொகை முழுமையாகக் கிடைத்தால் அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும். மத்திய அரசிடம் நமது பங்கைச் சரியாகக் கேட்டுப் பெற வேண்டும். மாநில வளர்சிக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பை வழங்கும்.’’

இவ்வாறு சிவா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE