நிதியாதாரம் புதுச்சேரியில் குறிப்பிட்ட அளவே உள்ளது; இது ஒரு சவால்: புதுவை ஆளுநர் தமிழிசை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. குறிப்பாக சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்திய பிறகு இவை ஒரு சவாலாகவே உள்ளன. தவிர்க்க முடியாத செலவினங்களை, கிடைக்கும் வருவாய்க்குத் தகுந்தவாறு சீர் செய்துகொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரைக்காக சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பேரவைத் தலைவர் இருக்கையில் தமிழிசை அமரவைக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநர் தமிழிசை ஆற்றிய உரை:

“புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கும், சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கடினமாகப் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலை சுதந்திரமான, நியாயமான முறையில் நடத்தப்பட்டது மகிழ்ச்சி. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மீண்டும் நம்பிக்கை வைத்துத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் அவரது தலைமையின் கீழ் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தது நிரூபணமாகியுள்ளது.

புதிய அரசானது வளர்ச்சி, வளம் மற்றும் மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்கப் பாடுபடும் என்று நம்புகிறேன். கரோனா பரவலைத் துரிதமாக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. உடனடியாக அனைவரும் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

2020-21ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8,419 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வருவாய் இலக்கில் 94 சதவீதம். 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8,342 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 93 சதவீதம். கரோனா தொற்றுப் பரவல் சூழலிலும் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.

புதுச்சேரி நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. குறிப்பாக சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்திய பிறகு இவை ஒரு சவாலாகவே உள்ளன. தவிர்க்க முடியாத செலவினங்களைக் கிடைக்கும் வருவாய்க்குத் தகுந்தவாறு சீர் செய்துகொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது. மக்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வருவாயைப் பெருக்கி அவற்றுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி ஒரு சிறந்த பட்ஜெட்டை முதல்வர் சமர்ப்பிப்பார் என்று நம்புகிறேன்.

புதுச்சேரியில் தேவையான அளவு மின்சாரம் உள்ளதால் தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் தரப்படுகிறது. மின்பகிர்மானக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.58.27 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையானதால் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து 235 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் கட்டுப்பாட்டில் வராத 42 திருக்கோயில்களைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.2.61 கோடி கொடையாகத் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலுள்ள 55 அரசுத் துறைகளில் இதுவரையில் 24 துறைகளின் வலைத்தளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 31 துறைகளுக்கு வலைத்தளங்கள் சீரமைக்கப்படும். புதுச்சேரி முழுக்க குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட உள்ளன. காவல்துறையைப் பலப்படுத்த புதிய காவலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்குப் புதிய வளாகம் ஒன்றை நிறுவ காரைக்காலில் 25 ஏக்கர் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரை இன்று தொடங்கி வைத்து தமிழில் ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.

அரசு, அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதர கட்டணங்களான நூலகக் கட்டணம், விளையாட்டு நாள் கட்டணம், பருவ இதழ் கட்டணம், கல்லூரி நாள் கட்டணம், ஆய்வகக் கட்டணம் ஏழை மாணவர்களுக்குத் தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். முதல்வர் வழிகாட்டுதலின்படி மக்களின் எதிர்பார்ப்புகளை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்ற கடுமையாகப் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத வளமை மிக்க பிரதேசமாகப் புதுச்சேரியை உருவாக்குவீர்கள். புதுச்சேரி விரைவில் கரோனா பரவலில் இருந்து விடுபடும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.

மொத்தம் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆளுநர் உரையாற்றிப் புறப்பட்டார். 15 திருக்குறள்களையும் உரையில் மேற்கோள் காட்டிப் பேசினார். வழக்கமாக ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றத் தமிழ் உரையைப் பேரவைத் தலைவர் வாசிப்பார். முதல் முறையாக ஆளுநரே உரையைத் தமிழில் வாசித்தார்.

அவையில் அமைச்சர்கள் சந்திரபிரியங்கா, சாய் சரவணக்குமார் தொடங்கி பல எம்எல்ஏக்கள் முகக்கவசமே அணியாமல் இருந்தனர். மேலும் கரோனா இடைவெளிப்படி இருக்கைகளும் பேரவையில் அமைக்கப்படாமல் நெருக்கமாகவே அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்