மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரம்மாண்டமாக அமையும் புதிய முகப்பு கட்டிடம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் புதிய முகப்பு கட்டிடம் ரூ.121.80 கோடியில் பிரம்மாண்டமாக அமைகிறது. 7 தளங்களுடனும், 22 ஹைடெக் அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் சர்வதேச தரத்தில் அமைய உள்ள இக்கட்டிடத்தின் மாதிரி வரைபடம் காண்போரை கவர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பரிந்துரையில் தமிழக அரசு ஜப்பான் நாட்டின் (JICA-Japanese International Co-operation Agency) நிறுவனத்திடம் ரூ.1,634 கோடி கடனுதவி பெறுவதற்கான திட்டம் ஒப்பந்தமானது. இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய அறுவை சிகிச்சை அரங்குகள், அதிநவீன மருத்துவ கருவிகள், புதிய சிகிச்சை அறைகள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பு சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் டீன் அலுவலகம் அருகே இருந்த பிரிட்டிஷார் கட்டிய பழைய முகப்புக் கட்டிடங்களை இடித்து அங்கு ரூ.121.80 கோடியில் பிரம்மாண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடக்கிறது. இந்த கட்டிடத்துக்கு ‘டவர் பிளாக்’ கட்டிடம் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டது. கீழ்த்தளம் 3,996.15 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. அதன் அடிப்படையிலே 7 தளங்களும் கட்டப்படுகிறது. மொத்தம் 22,580.90 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படுகிறது. தற்போது தரைத்தளப் பணிகள் நிறைவடையும் நிலையில், அடுத்த 18 மாதங்களில் இந்தத் திட்டத்தை முடிக்க பொதுப்பணித்துறை நட வடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பணிகளை ‘டீன்’ ரத்தினவேலு முடுக்கிவிட்டுள்ளார்.

இந்தக் கட்டிடத்தின் மாதிரி வரைபடம் காண்போரை பிர மிக்க வைத்துள்ளது. இதன் அடிப்படையில் கட்டிடம் அமைந்தால் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணை யாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முகப்பும் புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஜப்பான் நிறுவனத்தின் 85 சதவீத நிதி பங்களிப்புடனும் மீதி 15 சதவீதம் மாநில அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்துவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

இதுகுறித்து டீன் ரத்தினவேலு கூறுகையில், ‘‘இந்த கட்டிடத்தில் 22 அறுவை சிகிச்சை அரங்குகள், ஒரு உயர்தர அறுவை சிகிச்சை அரங்கு அடங்கிய ஒருங்கிணைந்த “தியேட்டர்ஸ் காம்பளக்ஸ்” அமை கிறது. இதுதவிர இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE