ராஜீவ் கொலையாளிகள் விவகாரம்: காங். வாக்கு வங்கிக்கு பாதிப்பில்லை

ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தால், காங்கிரஸின் வாக்கு வங்கிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேசிய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளின் அகில இந்திய மாநாடு, வரும் 6, 7ம் தேதிகளில் டெல்லியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தங்கள் மாநிலத்தில் உள்ள கல்வி தொடர்பான பிரச்சினைகளை தீர்மானமாகக் கொண்டு வர உள்ளனர். இதுகுறித்து, நாடு முழுவதும் ஒரு லட்சம் கருத்துக்கள் பெறப்படும். இந்தக் கருத்துக்கள் பின்னர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் காங்கிரஸார் பாத யாத்திரை நடத்த உள்ளனர். தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாத யாத்திரை நடத்தப்படும்.

ராஜீவ் கொலையாளிகள் நிரபராதிகள் என்ற பிரச்சாரமும், அவர்களை விடுதலை செய்ய எடுத்த முடிவும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்காக வாதாடுபவர் களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருகிறது.

கொலையாளிகள் என்று தண்டனை அளிக்கப்பட்டோரை நிரபராதிகள் என்று கூறுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இந்தப் பிரச்சினையால் காங்கிரஸின் வாக்கு வங்கிக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார். பேட்டியின்போது தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில்ராஜா உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE