பயிர்க் கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி அளவுக்கு முறைகேடு: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

பயிர்க் கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

2021-2022ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 13-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 14-ம் தேதியும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரு பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்றது. இதையடுத்து, 23-ம் தேதி முதல் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று (ஆக. 25) கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.516 கோடி அளவுக்கு பயிர்க் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில், சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் ரூ.503 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு தொழிலகக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றதில், ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE