கோவை மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் வேட்டையாடப்பட்ட சம்பவத்தில் 2 பேர் மீது சிபிஐ வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை

By க.சக்திவேல்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் 3 யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பது தொடர்பாக கொடைக்கானல் எஸ்.மனோஜ் இமானுவேல், மதுரை ஆரப்பாளையம் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், “யானைகள் கொல்லப்படுவது குறித்து மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு, மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) ஆகியவை சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்”என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், “தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்” என கடந்த பிப்.10-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவுப்படி, கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜக்கனாரி, கல்லாறு காப்புக்காடு பகுதிகளில் கடந்த 2010-11-ம் ஆண்டுகளில் 3 ஆண் யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பாக அப்போதைய வனச்சரக அலுவலர் அளித்த அறிக்கை அடிப்படையில், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (47), சிங்கம் (50) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு வனச்சட்டம், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சென்னை சிபிஐ சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த 12-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கின் பின்புல அறிக்கை

இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2016 ஜனவரி 11-ம் தேதி அப்போதைய வனச்சரக அலுவலர் எம்.நசீர் சமர்ப்பித்த அறிக்கையில், “கடந்த 2015-ம் ஆண்டு நீலகிரி, சீகூர் வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் குபேந்திரன், சிங்கம் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், இருவரும் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கல்லாறு வனப்பகுதியில் மூன்று யானைகளை வேட்டையாடி தந்தங்களை வெட்டி எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக யானை இறந்திருக்கும் தடயங்கள், குற்றத்தை கண்டறிய வனவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

2016 ஜனவரி 10-ம் தேதி ஒரு குழுவினரின் தேடுதல் பணியின்போது, ஜக்கனாரி காப்புக்காடு தாமரைபாளி ஓடைப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் ஒரு காட்டு யானையின் முகம் வெட்டப்பட்ட மண்டை ஓடு, யானையின் உடல் பாக எலும்புகள் கண்டறியப்பட்டன. அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் சிதிலமடைந்த மற்றொரு யானையின் மண்டை ஓட்டின் ஒருபகுதி, ஒரு பல், யானையின் உடல் பாக எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது.

அதே தேதியில், மற்றொரு குழுவினர் கல்லாறு காப்புக்காடு, ஆடர்லி சரகம், டவர்லைன் அருகில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது புதருக்குள் சிதிலமடைந்த ஒரு காட்டு யானையின் மண்டை ஓடு, 2 உடல்பாக எலும்புகள் கண்டறியப்பட்டன. வன கால்நடை மருத்துவர் எம்.எஸ்.மனோகரன் ஆய்வில்3 யானைகளும் இறந்து 4 முதல் 5 ஆண்டுகள் இருக்கலாம் எனவும், மண்டையோடுகள் வெட்டப்பட்டு, தந்தங்கள் எடுக்கப்பட்ட நிலையில் சிதிலமடைந்துள்ளதாக சான்றளித்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக 10 பேர் கைது

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கடந்த சில வாரங்களில் மட்டும் யானை தந்தங்கள் கடத்தல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி, கன்னியாகுமரி, சேலம் என தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். யானை தந்தங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு இவர்கள் விற்க முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் வழக்குகளில், வேட்டையாடுவதற்காக மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டியுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்