திருப்பத்தூரில் புற்றீசல் போல் பெருகும் செயற்கை மணல் தயாரிப்பு: இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டுகோள்

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘செயற்கை மணல்’ தயாரிப்பு பல்வேறு இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் வளத்தை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கனிம வளமும் கொள்ளை போகிறது. இதைக் காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆறுகளில் இருந்து மணல் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. கட்டுமானப் பணி தேவைகளுக்காக ஒரு சில பகுதிகளில் மட்டும் அரசு மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும், ஆறுகள் உள்ள மாவட்டங்களில் சட்ட விரோதமாகத் திருட்டு மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறுகளில் அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு, கடத்தப்படுவதால் தற்போது மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க செயற்கை மணல் தயாரிப்புத் தொழில் சில மாவட்டங்களில் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

ஆறு, குளம், ஏரி, குட்டை உள்ளிட்ட நீர்வரத்துப் பகுதிகள் மற்றும் விவசாயப் பட்டா நிலங்களில் அள்ளப்படும் மண்ணை, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் சேமித்து அங்கு அதற்கான அமைக்கப்பட்ட பிரத்யேகத் தொட்டியில் மண்ணைக் கொட்டி, மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அந்த மண் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அதன் மூலம் செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.

இந்த செயற்கை மணல் தயாரிப்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கு தடையின்றி வெட்ட, வெளிச்சமாக நடக்கிறது. ஒரு லோடு மணல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை போகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, செயற்கை மணல் தயாரிப்பு என்பது சிறு தொழிலாகவே நடந்து வருகிறது. விவசாயப் பணிக்காகத் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதைப் பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, நாட்றாம்பள்ளி, காக்கங்கரை, அம்பலூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் ‘செயற்கை மணல்’ தயாரிப்பு நடந்து வருகிறது.

செயற்கை மணல் தயாரிப்புக்காகக் கனிம வளங்களைச் சுரண்டுவதால் நிலத்தடி நீரைச் சேமிக்க வழியில்லாத நிலை ஏற்படுவதுடன், விவசாயப் பணிக்கு இனி தண்ணீர் இல்லாத அவல நிலை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அரசியல் பலம், பணபலம் உள்ளவர்களே செயற்கை மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் காவல் துறையினரும், வருவாய் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘கந்திலி, காக்கங்கரை, சுந்தரம்பள்ளி, நத்தம், நாட்றாம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, கொடையாஞ்சி, ஆம்பூர் அடுத்த மின்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயற்கை மணல் தயாரிப்புத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

செயற்கை மணல் தயாரிப்பு குறித்து பொதுமக்கள் காவல் நிலையங்கள், காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், தகவல் அளிப்போர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை மணல் கடத்தல்காரர்களிடம் காவல்துறையினரே வழங்கி விடுகின்றனர். அவர்கள் மூலம் தகவல் அளிப்போருக்குக் கொலை மிரட்டல், தாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடப்பதால் தற்போது மணல் கடத்தல் குறித்த புகாரைப் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு அளிப்பதில்லை.

நாட்றாம்பள்ளியில் அமைந்துள்ள செய்கை மணல் தயாரிப்பு இடத்தை எஸ்பி சிபிசக்கவர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசியல் கட்சியினரும், காவல்துறையினரும் மணல் கடத்தல் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிப்பதால் மணல் திருட்டைத் தடுக்கவே முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. இனியாவது காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு மணல் திருட்டைத் தடுக்க முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, ‘இந்து தமிழ் இணையதளத்திடம்’ கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், செயற்கை மணல் தயாரிப்பு குறித்துப் புகார் வந்ததன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.21) நடத்தப்பட்டுள்ளது. மணல் கடத்தல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவோர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மணல் திருட்டைக் கண்காணிக்க என் நேரடிப் பார்வையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். அதன்மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்