பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை குறுவை நெல்லுக்கும் நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை குறுவை நெல்லுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாட்டில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உழவர்களின் நலன் காப்பதற்கான இத்திட்டம் வரவேற்கத் தக்கது என்றாலும் கூட, குறுவை பருவ நெற்பயிர் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

இயற்கை மீது நாம் தொடுத்து வரும் தாக்குதல் காரணமாக, இயற்கை எந்த நேரத்தில் எத்தகைய எதிர்வினையை நிகழ்த்தும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இயற்கையின் இத்தகைய எதிர்வினைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுவது இயற்கையை நம்பி விவசாயம் செய்யும் உழவர்கள்தான். அவர்களைக் காப்பாற்றுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் 2021- 22ஆம் ஆண்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அறிவிக்கப்படாததால் உழவர்கள் கவலையடைந்து இருந்தனர்.

அதைப் போக்கும் வகையில் நடப்பாண்டிற்கு ரூ.2,327 கோடி செலவில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நடப்பு குறுவை பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். இதனால் மேற்கண்ட பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், நடப்பு குறுவை பருவத்தில் நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயத்தை நம்பியுள்ள பெரும்பான்மையான உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிருக்குக் காப்பீடு வழங்காமல், பிற பயிர்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதால் உழவர்களுக்கு பயன் இல்லை. குறுவைப் பருவத்தில் காப்பீடு செய்யப்படும் பயிர்களின் சாகுபடி பரப்பை விட, நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு மிகவும் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பாண்டும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது 5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளால் எந்த நேரமும் வறட்சியோ, வெள்ளமோ தாக்கக்கூடும் என்பதால், குறுவை நெல்லுக்கு பயிர்க்காப்பீடு அவசியமாகும்.

பயிர்க்காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும்கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் நெல் விவசாயிக்கு பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுடன் ஒப்பிடும் போது, பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு மிக மிக குறைவாகும். அத்தொகை இடுபொருள் செலவுக்குக் கூட ஈடாகாது.

பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியை புரிந்துகொள்ள முடிகிறது. ஒருபுறம் இத்திட்டத்திற்கான பங்களிப்பை மத்திய அரசு 49 விழுக்காட்டில் இருந்து 25-30% என்ற அளவுக்கு குறைத்து விட்டது. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன.

ஆனால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டியது அரசுதான். மாறாக, குறுவை நெல்லுக்குக் காப்பீடு வழங்க மறுப்பதன் மூலம் இந்த நெருக்கடியை உழவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அரசு விலகிக் கொள்வது நியாயமல்ல. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

2012ஆம் ஆண்டில் தொடங்கி 2020ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் மட்டுமே குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபம் அளித்துள்ளது. மீதமுள்ள ஆறு ஆண்டுகளில் காவிரிப் பாசன மாவட்ட உழவர்கள் கடும் இழப்பையே சந்தித்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உழவர்கள் தற்கொலை அதிகரித்ததற்கு இதுதான் காரணமாகும். குறுவை நெல் சாகுபடி செய்வதே சூதாட்டமாக மாறி விட்ட நிலையில், காப்பீடு வழங்குவது மட்டும்தான் உழவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்கும். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறுவை சாகுபடி என்பதே பழங்கதை ஆகிவிடும். அத்தகைய நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது.

எனவே, குறுவை நெற்பயிருக்கும், தட்டைப் பயிருக்கும் பயிர்க்காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்காப்பீடுகளுக்கு பிரிமியம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்