அரசுக்கான மோட்டார் பம்ப்செட் கொள்முதலில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோவை மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், இத்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் உள்ளனர். இங்கு அரை ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை தயாரிக்கின்றன.
கரோனா முதல்கட்டம் மற்றும் இரண்டாம்கட்ட பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதிப்புகளால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இத்தகைய பாதிப்பின் தாக்கத்தால் ஏற்கெனவே தொழில் துறை 10 ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்று விட்டதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் அதன் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட தொழில் துறையின் செயல்பாட்டில் கடந்த 6 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் தொழில் துறையினர்.
குறிப்பாக, மோட்டார் பம்ப்செட் துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சில நிறுவனங்களில் வாரத்தில் ஓரிரு தினங்கள் ‘நோ வொர்க்' எனப்படும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லா நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கரோனா ஒரு பக்கம் எங்களது தொழிலை பாதிக்கிறது என்றால் மறுபக்கம் மூலப்பொருட்கள் விலை உயர்வு கடுமையாக பாதிக்கிறது. கரோனாவின் தாக்கம் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. சிறு, குறு நிறுவனங்களில் நாளொன்றுக்கு 15 மணி நேரம் வரை இருந்த உற்பத்தி செயல்பாடு தற்போது 6 மணி நேரமாக குறைந்துள்ளது. நூறாண்டுகளில் இல்லாத தொழில் வீழ்ச்சி தற்போது உள்ளது. நீண்ட காலம் தொழில் செய்தவர்கள் பலர் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர்.
சிறு, குறு நிறுவனங்களில் நாளொன்றுக்கு ரூ.50 கோடி வரை மோட்டார் பம்ப்செட் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதில் 5 சதவீதம்கூட நடைபெறாத நிலை உள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அதிக ஆர்டர்கள் வரும் மாநிலங்களில் இருந்து வழக்கமாக வரும் ஆர்டர்கள் பெரிதும் குறைந்துள்ளன. சில நிறுவனங்களில் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் பயன்படுத்தும் காப்பர் விலை கிலோவுக்கு ரூ.500-லிருந்து தற்போது ரூ.1200-க்கு சென்று விட்டது. காஸ்டிங் ரூ.65-லிருந்து ரூ.95-க்கு சென்று விட்டது. இதேபோல் தான் இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடந்த 6 மாதங்களாக ஏறிக் கொண்டே இருக்கிறது.
தமிழக முதல்வர் இதுதொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி துறை சார்ந்தவர்களிடம் மாவட்ட நிர்வாகம் மூலமாக கருத்துகளை கேட்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கொள்முதலில் முன்னுரிமை அளித்து, 70 சதவீதம் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டுக்கு வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. செலுத்த தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago