கொட்டித் தீர்த்த மழையால் மிதந்த சென்னை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் நேற்று காலை கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 8 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார்ஒரு மணி நேரம் வரை மழை நீடித்தது.

வட சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கொளத்தூர், மணலி, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தென் சென்னை பகுதியில் சில இடங்களில் லேசான மழையும், இதர பகுதிகளில் மழையின்றி வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீர்த்த மழையால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், அண்ணா சாலையில் பல்வேறு இடங்கள், புளியந்தோப்பு கே.பி. பூங்கா, ஸ்ட்ராஹன்ஸ் சாலை திரு.வி.க. நகர் மண்டல அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

மேலும், நுங்கம்பாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், கெங்குரெட்டி பாலம் மற்றும் ரயில்வே சுரங்கப் பாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மரம் விழுந்ததால் நெரிசல்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் கீழ்ப்பாக்கம் முதல் அண்ணா நகர் ஆர்ச் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலையில் தேங்கியிருந்த நீரால், வாகன விபத்துகளும் நேரிட்டன.

தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு பகுதியில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, சாலைகளில் தேங்கியது. மேலும், அப்பகுதிகளில் வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

ரிப்பன் மாளிகை வளாகத்திலும் மழைநீர் தேங்கியது. அங்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி மூலம் நவீன உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு மழைநீர் அவசரம் அவசரமாக அகற்றப்பட்டது.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மிதந்த நிலையில், மாநகராட்சி சாலைப் பணியாளர்கள் மழையையும் பொருட்படுத்தாது பணிக்கு வந்து, மழைநீர் வடிகாலில் அடைப்புகளை நீக்கி,சாலையில் தேங்கிய நீரை வழிந்தோட செய்தனர்.

இதேபோல, சென்னை குடிநீர் வாரியம் சார்பிலும், நவீன நீர் உறிஞ்சு இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றுவது, மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்குவது போன்ற பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக, பிற்பகல் ஒரு மணிக்கு மேல் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்து, போக்குவரத்து சீரானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE