பெட்ரோல் - டீசல் விலை உயர்வு; பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் சூழல்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

By செய்திப்பிரிவு

பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிக்கை:

"மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. கரோனா தொற்று காரணமாக, அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 லட்சம் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 150-க்குக் கீழே சென்றுவிட்டது.

வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தச் சூழலில்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டு, அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

கடந்த 2014இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது. அப்போது, பெட்ரோல் விலை ரூ.71.51. டீசல் விலை ரூ.57.28. 2021 இல் கச்சா எண்ணெய் விலை 36 சதவிகிதம் குறைந்து 69 டாலராக உள்ளது.

ஆனால், பெட்ரோல் விலை 42 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.101.84 விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை 57 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.89.87 விலைக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி வருவது மக்களைப் பாதிக்கிற கடுமையான நடவடிக்கையாகும்.

மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 711 கோடி ரூபாய் கலால் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 7 ஆண்டுகளில் 22 லட்சத்து 38 ஆயிரத்து 868 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதன் மூலம், மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

அதேபோல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்காக, 2013-14ஆம் ஆண்டில் மானியமாக ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கி வந்தது.

தற்போது 2020-21 இல் மத்திய பாஜக அரசின் மானியத் தொகை 12 ஆயிரத்து 231 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மானியம் குறைக்கப்பட்டதாலும், கலால் வரி உயர்த்தப்பட்டதாலும், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படாததற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்ட ஆயில் பத்திரங்கள்தான் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வசூலித்த மொத்த கலால் வரி 22 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், 2014-15 முதல் ஆயில் பத்திரங்களுக்காக மத்திய பாஜக அரசு செலவழித்த தொகை 73 ஆயிரத்து 440 கோடி ரூபாயாகும். இது மொத்த கலால் வரியில் 3.2 சதவிகிதம்தான். 2020-21இல் மட்டும் பெட்ரோல், டீசலில் கலால் வரியாக 4 லட்சத்து 53 ஆயிரத்து 812 கோடி ரூபாய் அளவுக்கு மிகக் கொடூரமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொடிய கரோனா தொற்றின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய பாஜக அரசு மக்கள் மீது கடுகளவு கருணை கூட இல்லாமல் கலால் வரியை உயர்த்தியதன் மூலம், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து, மக்கள் மீது கடும் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

இதுதவிர, வரிப் பகிர்வும் சுருங்கிவிட்டது. உதாரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டில், 41 சதவிகித டீசலுக்கான மத்திய அரசின் வரிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது 5.7 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுடன் பகிரப்படுகிறது.

சாதாரண, ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதிக்கிற வகையில் நடவடிக்கைகளை எடுக்கிற பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் நலனைப் பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கார்ப்பரேட் வரியை 40 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைத்ததால் பாஜக அரசின் வரி வருவாய் 2019-20இல் 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2020-21 இல் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஒரே ஆண்டில் கார்ப்பரேட் வரி ஒரு லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு குறைத்துள்ளது. இதன் மூலம், மோடி அரசு யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கார்ப்பரேட்டுகளுக்காகவா? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா? இந்த நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களைக் கடுமையாக பாதிக்கிற வரி விதிப்புகளை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெறவில்லையெனில், மக்களைத் திரட்டி பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்