மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம்: பிரேமலதா பேச்சு

By எஸ்.கே.ரமேஷ்

மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம் என, ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஓசூருக்கு வந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டிராக்டர் ஓட்டியபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

"தமிழகம் ஏற்கெனவே வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி தண்ணீரை நம்பியே தமிழகம் உள்ளது. காவிரி நீரால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பயன்பெறுவதால், மேகதாது அணை கட்டக் கூடாது. தஞ்சாவூரில் விளைவிக்கப்படும் நெல்தான், இந்தியா முழுவதும் உணவுக்குப் பயன்படுகிறது. தஞ்சாவூருக்குத் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும்.

தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோர் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, சட்டவிரோதமாகப் பேசி வருகிறார். மாநில எல்லை வரை வந்தவர்கள், கர்நாடகாவுக்கு வரமுடியாதா? நமக்குள் பிரிவினை வேண்டாம் எனத் தமிழக விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திரபோஸாக இருக்க வேண்டுமா என, கர்நாடகா முடிவு செய்ய வேண்டும். மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம். நாம் இனத்தால், ரத்தத்தால், மூச்சுக்காற்றால் ஒன்றுதான். தண்ணீரால் மட்டும் ஏன் பிரிவினை? நமக்குள் பிரிவினை வேண்டாம்.

காவிரி நமது அன்னை, அதற்காக எதையும் செய்வோம். மத்தியில் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக அரசு ஆளுகிறது. எனவே, மத்திய அரசு கர்நாடகா அரசிடம் பேசி, கர்நாடகா அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்".

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE