இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்க பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதன் முத்தாய்ப்பாக தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கென தனியாக ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து சுமார் 60 சதவீதம் வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் சிறப்பு நடவடிக்கையாக இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்க “பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 2021-2022 ஆம் ஆண்டில் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
» நேரடி வகுப்புகள் தொடங்கிய 2 நாளில் சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு கரோனா
» ஆக.23 முதல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: அரசு அறிவிப்பு
இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்கைக் குறைத்துவிட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாலும், இவ்வாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனினும் தமிழக அரசு எடுத்த பெரும் முயற்சியினால் 5 காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்த நிலையில் காப்பீட்டு கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருந்த காரணத்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் அதிக காப்பீட்டு கட்டண விகிதம் நிர்ணயம் செய்திருந்ததாலும் இரு முறை ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டு மூன்றாவது ஒப்பந்தப் புள்ளியில் இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்) மற்றும் இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால், காரீப் பருவ (ஏப்ரல் முதல் ஜூலை) பயிர்களான நெல் மற்றும் தட்டைப் பயறு நீங்கலாக ஆகஸ்டு 16 முதல் ஆகஸ்டு 31 வரை பதிவு செய்ய கால அவகாசம் உள்ள பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் (Notified Areas) காப்பீடு செய்யப்படும்.
எனினும், காரீப் பருவத்தில் (ஏப்ரல் முதல் ஜூலை) இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய இயலாத பயிர்களுக்கு முக்கியமாக நெற்பயிர் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்பு அடைய நேரிட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும் சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் (அக்டோபர் முதல் மார்ச்) அறிவிக்கை செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரை, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை காரீப், 2020 பருவத்திற்கு ரூ.107.54 கோடியை சுமார் 1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-2021ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் நிவர் புயல், புரவி புயல் மற்றும் வடகிழக்குப் பருவ மழையினால் பெரும் சேதமடைந்து அதற்கான இழப்பீட்டுத் தொகை மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு தமிழக அரசு “காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1248.92 கோடி விடுவித்துள்ளது. (அரசாணை (டி) எண். 140, வேளாண்மை-உழவர் நலத் (வே.உ.2) துறை, நாள் 16.08.2021)
இத்தொகை, திட்டம் தொடங்கப்பட்ட 2016-2017 வருடம் முதல் 2020-2021 வரை வழங்கப்பட்ட மானியத்தை விட அதிகமான தொகையாகும். தற்போது தமிழக அரசு பெரும் நிதிச்சுமையில் இருந்தாலும் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை பெற இப்பெரும் தொகையை இவ்வரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களைத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் (e-சேவை மையங்கள்) காப்பீடு செய்து இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்''.
இவ்வாறு வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago