கரோனா பேரிடரில் இப்படியும் கற்பிக்கலாம்: நுண் வகுப்பறைகளை வெற்றிகரமாக நடத்தும் கிராமப் பள்ளி

By க.சே.ரமணி பிரபா தேவி

கரோனா பெருந்தொற்று குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. தொற்றைக் குறைக்க அமல்படுத்தப்பட்ட கரோனா ஊரடங்கால், பள்ளிகள் திறக்கப்படாமல் குழந்தைகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகளால், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இடைநிற்றல் அபாயமும் அதிகரித்து, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர்.

வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக அமலில் உள்ள ஆன்லைன் கல்வி, தொழில்நுட்ப, பொருளாதாரக் காரணங்களாலும் உடல் ரீதியான பிரச்சினைகளாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லை.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது. என்றாலும் பிற வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதற்கு யாரிடமும் விடை இல்லை. கரோனா 3-வது அலை குறித்த அச்சம் பரவலாக உள்ள தருணத்தில், உயர் வகுப்புகளுக்காகப் பள்ளிகளைத் திறப்பதே எந்த அளவு சரியாக இருக்கும் என்று கேள்வி எழுகிறது.

இந்த சூழலில், பள்ளிகளில் நேரடிக் கற்றலுக்கும் ஆன்லைன் கல்விக்கும் மாற்றாக, திருவண்ணாமலையில் உள்ள கிராமப் பள்ளி ஒன்று நுண் வகுப்பறைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இங்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், வகுப்பில் இதுவரை ஒருவருக்குக் கூடத் தொற்று ஏற்படவில்லை.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசுகிறார் பள்ளியின் தாளாளர் மதன். ''திருவண்ணாமலையில் 22 ஆண்டுகளாக இயங்கி வரும் அருணாச்சலா கிராம தொடக்கப் பள்ளி மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை மூலம் இங்கு ஆங்கில வழியில் நவீன வசதிகளுடன் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல், மாணவர்களுக்கு அடிபணியும் ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் நிகழ்த்துவதே எங்களின் சாதனை.

எங்கள் பள்ளியில் விருப்பப்பட்ட இடங்களில், விருப்பப்பட்ட நேரங்களில் குழந்தைகள் படிக்கலாம். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரை ஒரு மாணவருக்கு ஓர் ஆசிரியர் கற்பிப்பார்.

சமத்துவக் கல்வி

ஒருவரின் வாழ்வில் சுகாதாரம், கல்வி இரண்டுக்கும்தான் அதிகம் செலவாகிறது. அவை இரண்டையும் ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் ஒரேபோல அளித்துவிட்டால் பெரும்பான்மையான பிரச்சினைகள் குறையும் என்று நம்புகிறேன். அந்த வகையில்தான் தன்னார்வலர்களின் உதவியுடன் பள்ளியும் நுண் வகுப்பறைகளும் இயங்கி வருகின்றன'' என்கிறார் பள்ளியின் தாளாளர் மதன்.

நுண் வகுப்பறைகள் குறித்து அவர் கூறும்போது, ''எல்லாவற்றையும் திறந்துவிட்டு, குழந்தைகளை மட்டுமே வீட்டில் உட்கார் என்று கூறுவது நியாயம் கிடையாது. கரோனாவுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பும்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல், குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவை முக்கியப் பிரச்சினையாக இருக்கப் போகின்றன. இப்போது தெரியவில்லை என்றாலும் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பல்லாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயமும் இதில் உண்டு.

அதற்காக நான் ஆன்லைன் வகுப்புகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். இந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு நாள்கூட நாங்கள் ஆன்லைன் வகுப்பு எடுக்கவில்லை. அதன் மூலமாக மாணவர்களை அணுக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பூஜ்ஜியத் தொற்று

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு நுண் வகுப்பறைகளைத் தொடங்கினோம். பெருந்தொற்றுக் காலத்தில் நுண் வகுப்பறைகள் முன்னுதாரண முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறோம். 2020 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச் வரை 6 மாதங்களுக்கு வகுப்புகள் நடந்தன. அப்போது யாருக்கும் எந்தத் தொற்றும் ஏற்படவில்லை. அது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. இரண்டாவது அலை ஏற்படத் தொடங்கியதால் தற்காலிகமாக நிறுத்தினோம். தற்போது மீண்டும் ஒரு மாதமாக வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம்'' என்கிறார் மதன்.

அருணாச்சலா கிராமப் பள்ளியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தனியார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நுண் வகுப்பறைகள் தொடங்கி நடத்தப்படுகின்றன. கிராமங்களைச் சுற்றியுள்ள கோயில் வளாகம், மரத்தடி, வயல்வெளி, வீட்டுத் திண்ணை என சாத்தியமான இடங்களில் எல்லாம் கற்பிக்கின்றனர். 10 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையில் தினந்தோறும் காலை 8.30 மணி முதல் 12.30 வரை வகுப்புகள் நடக்கின்றன.

எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை யார் வேண்டுமானாலும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம். வழக்கமான பாடங்களுடன் நிறுத்திவிடாமல் கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய அடிப்படைப் பாடங்களும் எடுக்கப்படுகின்றன. அத்துடன் ஓவியம், வீணை வாசித்தல், கர்நாடக இசை உள்ளிட்ட கலைகள், கைவினைக் கலை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்பிக்கின்றனர்.

கற்பித்தலின்போது கடைப்பிடிக்கப்படும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்துப் பகிர்ந்துகொள்ளும் மதன், ''தற்போது 14 இடங்களில் நுண் வகுப்பறைகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு முதலில் கரோனா குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வகுப்பு தொடங்குவதற்கு முன்பும் குழந்தைகளுக்கு முகக் கவசம் கொடுத்துவிடுவோம். சானிடைசரும் அளிக்கப்படும். மீண்டும் வீட்டுக்குச் செல்லும்போதும் கைகள் சுத்தம் செய்யப்பட்டே குழந்தைகள் அனுப்பப்படுவர். குழந்தைகளும் போதிய விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

கற்றல் உபகரணங்களும் இலவசம்

வகுப்புக்கு இடையில் குழந்தைகள் முகக்கவசத்தை நீக்க வேண்டி வந்தால், அவர்களின் கைகளைச் சுத்திகரித்து மீண்டும் வேறு முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. கரோனா காலத்தில் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், கல்வி மட்டுமல்லாமல், நோட்டுகள், புத்தகங்கள், ஸ்டேஷனரி, பேனா, க்ரேயான்கள், கலர் பென்சில்கள் காகிதங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே இலவசமாக வழங்குகிறோம்.

பெற்றோரின் முழு ஒப்புதலுடன்தான் குழந்தைகள் வகுப்புக்கே வருகின்றனர். கரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம். இப்படி தினந்தோறும் சுமார் 525 குழந்தைகள் நுண் வகுப்பறைகள் மூலம் படிக்கின்றனர். இதுவரை ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை'' என்கிறார் மதன்.

எல்லா அமர்க்களமும் செய்பவர்களே எங்களின் ஆசிரியர்கள்

நுண் வகுப்பறைக்கான ஆசிரியர்கள் தேர்வு எப்படி நடக்கிறது என்று கேட்டபோது, ''ஆசிரியர் பயிற்சி முடித்த, குழந்தைகளிடம் கனிவாகவும் பெற்றோரிடம் மரியாதையாகவும் பேசக்கூடிய, தெரியவில்லை என்றால் அதை ஒப்புக்கொண்டு, ’அடுத்த நாள் அக்கா கத்துக்கொண்டு வந்து சொல்றேன்’ என்ற வெளிப்படையான எண்ணத்துடனும் இருப்போரையே தேர்ந்தெடுக்கிறோம். அக்கா என்றுதான் எங்கள் குழந்தைகள் ஆசிரியைகளை அழைப்பர். குட்டிக்கரணம் போடக்கூடிய, குதிக்கக்கூடிய குழந்தைகளைப் போலவே எல்லா அமர்க்களமும் செய்பவர்களே எங்களின் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் மருத்துவ, பொருளாதார, உளவியல் ரீதியான உதவிகள் தேவையா என தினந்தோறும் எங்கள் ஆசிரியர்கள் பேசுவர். ஆசிரியர்கள் கரோனா காலத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியதால், தொற்று குறித்த விழிப்புணர்வையும் அவர்களே அளித்து விடுகின்றனர். பெற்றோரிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்'' என்கிறார் மதன்.

இடங்கள் தேர்வு

நுண் வகுப்பறைகளுக்காக இடங்கள் தேர்வு மிகவும் முக்கியமானது என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே சென்றுவிடுகின்றனர். வீடுகளில் இருந்து சற்றே தொலைவான இடங்கள், நெருக்கம் குறைவான பகுதிகள், கோயில்கள், வீட்டுத் திண்ணைகள், மரத்தடி, வயல்வெளி, மொட்டை மாடி, யாருமே பயன்படுத்தாத வீடு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து வகுப்புகளை நடத்துகின்றனர்.

இதுகுறித்து மேலும் பேசும் மதன், ''நுண் வகுப்பறைகளில் தொற்றுப் பரவல் அபாயம் உண்டு என்பது தெரியும். ஏதேனும் தவறாக நிகழ்ந்துவிட்டால் எங்களின் பெயர்தான் கெடும் என்பதை உணர்ந்திருந்தோம். நாங்கள் தடாலடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை நிறைய யோசித்துத்தான் வகுப்புகளைத் தொடங்கினோம்.

அரசின் கவனம் கிடைக்குமா?

பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் தினந்தோறும் எடுக்கப்படும் பாட அட்டவணையைத் தயாரித்து, ஒவ்வொரு இடத்திலும் அதிகபட்சம் 10 குழந்தைகளை ஒன்றிணைத்து வகுப்பெடுத்தால் போதும். எங்குமே மாணவர்களின் கற்றல் தடைபடாது. நாட்டின், மாநிலத்தின் ஒட்டுமொத்த கரோனா தொற்றுப் பரவல் விகிதம், சம்பந்தப்பட்ட இடத்தின் தொற்றுப் பரவல் ஆகியவற்றைக் கணக்கிட்டே நுண் வகுப்பறைகளை நடத்துகிறோம்.

அரசும் இதுகுறித்துப் பரிசீலித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுண் வகுப்பறைகளைத் தொடங்கினால் பெரும் மாற்றம் நிகழும். கற்பித்தலுக்கு ஆசிரியர்களுடன், அந்தந்தப் பகுதியில் வேலை இல்லாமல் இருக்கும் தகுதிவாய்ந்த பட்டதாரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பும் பெருகும். விளிம்பு நிலை மாணவர்களின் வாழ்வு வளம் பெறும்'' என்று முடித்தார் மதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்