தமிழக அரசு தயாரிக்கும் விடுதலைப் போர் ஆவணத்தில் எந்தத் தலைவரின் பெயரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆஅக. 16) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றைத் தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது கண்டிப்பாகச் செய்ய வேண்டிய பணி என்பதில் எந்த ஐயமும் இல்லை; ஆனால், அதில் எந்தத் தலைவரின் பெயரும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் நடைபெற்ற இந்தியாவின் 75ஆவது விடுதலை நாள் விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி தியாகங்களைச் செய்த தமிழக தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார்.
கடந்த ஆண்டு விடுதலை நாள் விழாவில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றியபோது குறிப்பிடப்பட்ட தலைவர்களின் பட்டியலில் இடம் பெறாத பாரதியார் உள்ளிட்ட 12 தலைவர்களின் பெயர்களை இன்றைய முதல்வர் கூடுதலாகக் குறிப்பிட்டார்.
இந்திய விடுதலைக்குப் பங்களித்த எந்தத் தலைவரின் தியாகத்தையும் அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் கூடுதலாக 12 தலைவர்களின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்ததற்காக, கடந்த ஆண்டு விடுதலை நாள் விழா உரையில் அப்போதைய முதல்வரால் நினைவு கூறப்பட்ட 15 தலைவர்களின் பெயர்கள் நடப்பாண்டு விடுதலை நாள் விழாவில் முதல்வர் உரையில் இடம்பெறாதது மிகவும் வேதனையளிக்கிறது. இது அரசின் தவறா... அல்லது அதிகாரிகளின் அலட்சியமா? என்பது தெரியவில்லை. ஆனால், விடுதலைப் போராட்டத் தலைவர்களின் பெயர்களை நினைவுகூரத் தவறுவதை ஏற்க முடியாது.
மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், காந்தவராயன் & சேந்தவராயன், தீரர் சத்தியமூர்த்தி, காயிதே மில்லத், வ.வே.சு அய்யர் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கை எவராலும் மறுக்க முடியாது.
ஆனால், இவர்களின் பெயர்கள் முதல்வர் ஸ்டாலினின் உரையில் இடம்பெறவில்லை. இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாட்சி காந்தியடிகளின் அறப்போராட்டத் தோழர்; ஆங்கிலேயர்களின் இனவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர் நீத்தவர்; சத்தியாகிரகத்தில் உயிர்த்தியாகம் செய்த முதல் இந்தியர்; தென்னாப்பிரிக்காவில் அவரது நினைவிடத்தை காந்தியடிகளே அமைத்து திறந்து வைத்தார்; இப்போதும் தென்னாப்பிரிக்காவில் அவருக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன என்பது போன்ற பல சிறப்புகள் நாகப்பன் படையாட்சிக்கு உண்டு.
சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் சென்னையிலுள்ள தமது சொத்துகளை ஏழைகளுக்கு வாரி வழங்கியவர்; விடுதலைப் போரில் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்; இவரது வீரத்தையும், தீரத்தையும் பார்த்து வியந்த காந்தியடிகள், அவருக்கு சர்தார் பட்டத்தை வழங்கினார். சர்தார் வல்லபாய் படேலுக்கு இணையாக இந்தப் பட்டத்தை காந்தியடிகளிடம் பெற்ற இரு தமிழர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் போலவே இரட்டை மன்னர்கள் காந்தவராயன், சேந்தவராயன், பகதூர் வெள்ளையத்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரத்தாய் குயிலி, விருப்பாட்சி கோபால நாயக்கர், தியாகி சீனிவாசராவ், தியாகி விஸ்வநாத தாஸ், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத், ரெபல் முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு அய்யர், ஜெய்ஹிந்த் செண்பகராமன், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரும் இந்திய விடுதலைக்காகச் செய்த தியாகங்கள் ஏராளம். அந்த தியாகங்களும், அவர்களும் மறக்கப்படக் கூடாது; மறைக்கப்படக் கூடாது என்பதுதான் பாமகவின் நோக்கம் ஆகும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இந்திய விடுதலைக்காகப் போராடிய இந்தத் தலைவர்களின் பெயர்கள் முதல்வரின் உரையில் விடுபட்டது தொடர்கதையாகிவிடக் கூடாது. இனிவரும் விடுதலை நாட்களில் இவர்களின் பெயர்கள் நினைவுகூரப்பட வேண்டும். இதுவரை விடுதலை நாள் விழா உரைகளில் குறிப்பிடப்படாத விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் போன்றவர்களின் பெயர்களும் விடுதலை நாள் விழாக்களில் போற்றப்பட வேண்டும்.
தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட உள்ள இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பிலான வரலாற்று ஆவணத்தில் இந்தத் தலைவர்கள் உள்ளிட்ட விடுதலைக்காக போராடிய அனைத்து தலைவர்களின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் உள்ளிட்ட எந்தெந்த தலைவர்களுக்கெல்லாம் தமிழகத்தில் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லையோ, அவர்கள் அனைவருக்கும் நினைவிடங்கள், உருவச்சிலைகள் போன்றவற்றை அமைத்து அவர்களை பெருமைப்படுத்துவதற்கும் அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago