பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஆக. 16) வெளியிட்ட அறிக்கை:
"திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100ஆவது நாளில், அனைத்து சாதியினரும், இந்துமத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையைத் தமிழக மக்களுக்கு சமத்துவப் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
சென்னை மைலாப்பூரில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருசுவாமிகள், சுகிசிவம், தேசமங்கையர்க்கரசி முதலான இந்துமதச் சான்றோர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்கு, பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காட்சி நம்மையெல்லாம் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதக்கச் செய்தது.
» 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 450 இடங்களைக் கைப்பற்றும்: அண்ணாமலை நம்பிக்கை
» புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.31 நள்ளிரவு வரை நீட்டிப்பு
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராகப் பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி 'போற்றி, போற்றி' என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மைப் பெரிதும் பரவசம் கொள்ளச் செய்துவிட்டது.
அனைத்து சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவ சாதனையை, அமைதிப் புரட்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக, 1970ஆம் ஆண்டு குடியரசு நாளான ஜனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக பெரியார் அறிவித்தார். முதல்வர் கருணாநிதி பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்ததை ஏற்று, பெரியார் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
கருணாநிதி இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், திமுகவும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக, 16.12.1975 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனாலும், முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வரவில்லை.
பெரியார் மறைந்தபோது, 'இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய்க் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்' என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார் முதல்வர் கருணாநிதி.
அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
அமைதிப் புரட்சியை, சமத்துவப் புரட்சியை, ரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்துக்குப் பறைசாற்றியுள்ள தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மதிமுக சார்பில் இதயம் கனிந்த, இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்!".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago