தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் என்பதை வரவேற்கிறோம்: இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் என்பதை வரவேற்கிறோம் என்று, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவையொட்டி திருப்பூரில் தியாகி குமரன் நினைவுமண்டபம், குமரன் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “75-வதுசுதந்திர தினத்தை 365 நாட்களும் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் நடைபெற்ற திமுக ஆட்சி, நூறு ஆண்டுகள் பேசப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். உண்மையில் இது நூறு நாட்கள் வேதனை. ஆட்சிக்கு வந்தவுடன் செயல்திறன் மிக்க அரசாக செயல்படுவோம், கரோனாவை முறியடிப்போம் எனக் கூறினார். ஆனால், கரோனாவை கையாள்வதில் தோல்வி கண்டுள்ளனர். மின் வெட்டு, மின் கட்டண உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில நடவடிக்கைகள் மட்டும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.

அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்பது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான். தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் என்பதை எப்போதும் வரவேற்பவர்கள் நாங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE