10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சுதந்திர தின உரையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்

By அ.முன்னடியான்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தனியார் பங்களிப்புடன் ஏஎப்டி தொழிற்சாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திர தின உரையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சார்பில் சுதந்திர தினவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று காவர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது: ‘‘முதல்வராக பொறுப்பேற்ற அன்றே முதியோர், விதவை, முதிர் கண்ணிகள்,

திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கவும், கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கவும் கையெழுத்திட்டிருந்தேன். அதன் அடிப்படையில் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இதேபோல், விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ சமுதாய மக்களுக்கும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்னலைப் போக்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க உத்தரவிட்டேன்.

அதன்படி, 3.46 லட்சம் அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக மொத்த பணமும் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 7.60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் மூலம் புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலின் விகிதமும், இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது.

அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு இயந்திரம் வேகமாக செயல்படுவது அவசியமாகும். எனவே, அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை எனது அரசு துரிதப்படுத்தியுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

ஏஎப்டி தொழிற்சாலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏஎப்டி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தின் அமைதியை பேணி பாதுகாப்பதிலும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதிலும் எனது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பில் புதுச்சேரி நகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து, நகரை கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாரம்பரிய பள்ளிகளான கல்வே காலேஜ் ரூ.4.80 கோடியிலும், வ.உ.சி. பள்ளி ரூ.2.81 கோடியிலும் புனரமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் 12 முதல் 16 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் பழைய சிறைச்சாலை வளாகத்திலும், பழைய துறைமுக வளாகத்திலும் கட்டப்படும். இப்பணி இந்த நிதியாண்டிலேயே தொடங்கப்படும். லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை நிலை நிறுத்த மக்கள் தங்களது ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எவ்வித தயக்கமோ, அச்சமோ இன்றி தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மக்களின் முழு ஒத்துழைப்போடு இந்த கரோனா தொற்றிலிருந்து நாம் விரைவில் பூரணமாக விடுபடுவோம் என்று திடமாக நம்புகிறேன். மேலும், தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.’’ இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

பின்னர், காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதன் பிறகு தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள், அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறவில்லை. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE