ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை தமிழ்நாடு முதல்வர் வழங்கியிருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பெரியாரின் கனவு மெய்ப்பட்டு அவரது நெஞ்சில் தைத்த முள் தமிழ்நாடு முதல்வரால் களையப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்த தமிழ்நாடு முதல்வரையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்.
இந்திய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எல்.இளையபெருமாள் கமிட்டி 1969 இல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் 1970ஆம் ஆண்டு ‘ சமத்துவப் பெரியார்’ கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசு, இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 இல் திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து சில சனாதனவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அர்ச்சகர் என்பவர் சமயத் தலைவருக்கு ஒப்பானவர் என்று அங்கு வாதிட்டனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அவர் அறங்காவலர்களால் நியமிக்கப்படும் ஒரு ஊழியர் மட்டும் தான் என்று அது தீர்ப்பளித்தது. ஆனால் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அந்த முறையின்படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது.
அதனால் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள பெரிய கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை இருந்தது.
2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றபோது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவந்தார். அப்படி நியமனம் செய்வதற்கென அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களைத் தமிழக அரசு நிறுவியது.
2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை எதிர்த்து சனாதனிகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அதனால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியெடுத்த 206 பேரை திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை உண்டானது.
இதனிடையே 2015ஆம் ஆண்டு அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அந்த முறைப்படி தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று உறுதிசெய்தது. ஆனால் அந்த நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 இல் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முரணானதாக இருக்கக்கூடாது. அந்த நியமனம் பிறப்பின் அடிப்படையில் எவரையும் பாகு படுத்துவதாக அமையக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
இதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு அதுவரை இருந்துவந்த தடை முழுமையாக நீங்கியது. ஆனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு அப்போதிருந்த அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. இப்போது மீண்டும் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அதன் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இலட்சியத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து சாதனை படைத்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 100 ஆவது நாளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு-14 ஐக் குறிப்பிட்டு ‘அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்படவேண்டும்’ என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
எனவே ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மற்றவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago