சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவை கருணாநிதி முதலமைச்சராக இருந்து கொண்டாடினார். சுதந்திர தினத்தின் பவள விழாவினை மீண்டும் திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவம்” ஆகிய முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னதமான அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியத் திருநாட்டிற்கு தந்திருக்கும் சுதந்திரத்தை நாம் பெற்று 75 ஆண்டுகள்! தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் நாம் அனைவரும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி - நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது. ஆயுதமின்றி - அறவழி ஒன்றையே தங்களின் தொய்வில்லா போராட்டமாக நடத்திக்காட்டி இந்தியாவிற்கு ஜனநாயக்காற்றை சுவாசிக்க கிடைத்த இந்தச் சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம்.
» முக்தியடைந்த மதுரை ஆதீனம் உடல் நல்லடக்கம்: அனைத்து மதப் பிரமுகர்கள், மக்கள் திரண்டு அஞ்சலி
» ஒரு வாரத்திற்கு முன்பதிவு; மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையம் ஹவுஸ்ஃபுல்
அண்ணல் காந்தியடிகள் தமிழர்களின் பண்பாடுகளை நேசித்தவர். இந்தத் தமிழ் மண்ணை மதித்தவர். அத்தகைய தமிழ்நாடு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் போராட்டத்திற்கான வியூகங்களை வகுப்பதில் ஒரு முக்கியமான களமாக விளங்கியிருப்பதை சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு முத்தாய்ப்பாக பதிவு செய்திருக்கிறது. சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவை கருணாநிதி முதலமைச்சராக இருந்து கொண்டாடினார். சுதந்திர தினத்தின் பவள விழாவினை மீண்டும் திமுக அரசு கொண்டாடுவது எனக்கு மட்டுமல்ல - தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமிதம் அளிக்கிறது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை என்றைக்கும் மதித்துப் போற்றும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த நேரங்களில் எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு - அந்தத் தியாகிகளின் தியாக உணர்வினை வணங்கும் பொருட்டு கம்பீரமிக்க நினைவுத்தூண் எழுப்பி சிறப்பித்திருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு - வளர்ச்சிப் பாதையை நோக்கி - அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் - எல்லாருக்கும் எல்லாம் என்ற சீர்மிகு பயணத்தை நோக்கி தமிழ்நாட்டை அழைத்துச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று - இந்த 100 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் விரைந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்தியை இந்த சுதந்திர தினத்தன்று தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த பூரிப்படைகிறேன்.
அனைத்துத் துறைகளிலும் - வியத்தகு முன்னேற்றத்தை அடையும் இலக்குடன், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்தி - தமிழ்நாடும் - இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற்றிடப் பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம்" என்று கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago