உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:
உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.
அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
பதிவு செய்வது எப்படி?
உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.
உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும். இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.
நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும். கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில் 250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன. உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர் தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.
தமிழகம் தொடர்ந்து முன்னிலை
உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து 7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும், இதயத்துக்காக 28 பேரும், நுரையீரலுக்காக 39 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
விழிப்புணர்வு வேண்டும்
உறுப்பு தான விழிப்புணர்வை அதிகரிக்க சமூகத்தில் பிரபலமானவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம் நடத்தலாம். மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள், பேருந்து / ரயில் பயணச் சீட்டுகளில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
எனவே, முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்குக் கொடுக்காமல், மனிதர்கள் உயிர்வாழ கொடுப்போம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago