தமிழகத்தின் சமீபத்திய பேசுபொருள் வெள்ளை அறிக்கை. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையில் மாநிலத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அது எந்த அளவுக்கு அதாவது கடன் சுமை வளர்ச்சித் திட்டங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை வெளியிட்டுள்ளார். விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் நிச்சயம் வரிச் சுமை இருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதைப் போல அமைந்துள்ளது வெள்ளை அறிக்கை.
அண்டை மாநிலமான கேரளாவில் 2 முறை (2016 மற்றும் 2019) வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தனது வெளிநாட்டு கொள்கை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தங்களது எதிர்கால உறவு தொடர்பாக இங்கிலாந்து அரசும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது மாநிலத்தின் நிதி நிலை பற்றியதாகும். பொதுவாக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது தமிழக நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையும் ஏறக்குறைய இப்படித்தான்உள்ளது. இதில் பரவலாக சுட்டிக் காட்டப்பட்டிருப்பது மானிய சலுகைகள், மக்கள் நல உதவித் திட்டங்கள்தான்.
இதற்கு முன்பு அதிமுக பதவியேற்றபோது அப்போது நிதி அமைச்சராக இருந்த பொன்னையன், தமிழகத்தின் கடன் சுமை ரூ.1.10 லட்சம் கோடி எனக் குறிப்பிட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடி. ஆக ஒரே நாளில் அல்லது ஒரே ஆண்டில் இந்த கடன் சுமை அதிகரிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவு.
தொழில் வளர்ச்சி பெற்ற மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளாக உபரி வருமானத்தை ஈட்டி வரும் நிலையில் தமிழகம் மட்டும் கடன் சுமையில் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்வது வருத்தமளிக்கும் விஷயமே. 2019-20-ம் நிதி ஆண்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.35,909 கோடியாகவும், 2020-21-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
பொதுவாக மூலதன செலவுகளுக்காக அதாவது பாலங்கள் கட்டுவது, மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது போன்றவற்றுக்காக கடன் பத்திரங்கள் வெளியிட்டு கடன் திரட்டுவது வழக்கம். ஆனால் இப்போது நிலைமை மாறி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கே கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளது சராசரி மனிதனின் மேல் வைக்கப்பட்டிருக்கும் சுமை.
இதில் மேலும் வருத்தமளிக்கும் விஷயம் என்னவெனில் வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்கு மேலும் கடன் திரட்டி வட்டி கட்டிய நிகழ்வுகள் தமிழக நிதிநிலை சவால் நிலைக்கு சென்றடைந்ததை காட்டுவதாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வரி வருவாய் குறைந்து கொண்டே வந்துள்ளது. 2006-07-ம் நிதி ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.48 சதவீதமாக இருந்த வரி வருவாய் 2020-21-ம் ஆண்டில் 5.46 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமே. 2018-19-ம் நிதி ஆண்டிலேயே மாநிலத்தின் மொத்த வரி வருவாய் விகிதம் தேசிய சராசரியை விடக் குறைந்துவிட்டது.
வாக்கு வங்கியை மையமாகக் கொண்டே அரசியல் நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதும் இதற்கு முக்கியக் காரணம். வரி விதித்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்ற அபிப்ராயம் மற்றும் வசதிபடைத்தவர்களுக்கும் மானிய உதவிகள் சென்று சேரும் வகையில் இருப்பதும் கடன் சுமை அதிகரிப்புக்கு முக்கியக்காரணமாகும். சுரங்கம், கனிமங்கள் மீதான வரி வருவாய் குறைந்ததோடு வருவாய் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்காதது உள்ளாட்சி அமைப்புகளின் செயல் திறனைபலவீனமடையச் செய்துள்ளதையும் மறுக்க முடியாது. போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்சார கழகம் இரண்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றின் கடன் சுமை மட்டுமே ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
மேலும் அரசு போக்குவரத்துக் கழகபேருந்துகள் ஒரு கி.மீ. பயணித்தால் ரூ. 59.15 இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த அரசு பெண்களுக்கு இலவச பயணச் சலுகையை வழங்கியுள்ளது. இது கூடுதல் சுமையாக அமையும் என்பதையும் அவர் உணர்ந்திருப்பார்.
இதேபோல மின் கட்டணங்கள் மற்றும் சலுகைகளால் ஏற்பட்ட கடன் சுமையை எப்படி போக்குவது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சலுகை மாறி அனைத்துத் தரப்பினருக்கும் என மாறும்போது அது பெரும் சுமையாக மாறுவது இயல்வே. இதை மாற்றி அமைத்து மற்ற சவால்களையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கையாண்டு மாநில அரசின் பங்கைப் பகிர்ந்து விடுகிறது.
மோட்டார் வாகன பதிவு வரி, பெட்ரோலியம் மீதான வரி, பத்திரப் பதிவு, மற்றும் மின் கட்டணம், உள்ளாட்சி சொத்து வரி, டாஸ்மாக் உள்ளிட்டவை மூலம்தான் அரசு தனது வரி வசூலை அதிகரிக்க முடியும். இதனால் சொத்து வரி, வாகன வரி உள்ளிட்டவற்றில் கடும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உருவெடுத்த தமிழகம் தற்போது கடன் சுமையில் தத்தளிப்பது வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
வெள்ளை அறிக்கை கடந்த ஆட்சியால் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக் காட்ட மட்டுமல்ல, தவறுகளை திருத்தி எப்படிநிதிநிலையை அரசு உயர்த்தப் போகிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக பட்ஜெட் அறிவிப்புகள் இருப்பதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
தொடர்புக்கு: karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago