திருச்சியில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட 125 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

By ஜெ.ஞானசேகர்

திருச்சியில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கடையை இன்று திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தக் கடையில் பான் மசாலா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கடையின் உரிமையாளரின் வீட்டில் ஆய்வு செய்து, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குத் தொடர்வதற்காக சட்டப்பூர்வ 6 உணவு மாதிரி எடுக்கப்பட்டு, அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கூறும்போது, ''திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர்புடைய கடைக்கு சீல் வைக்கப்படும்.

இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் 99449 59595, 95859 59595 ஆகிய செல்போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE