திருப்பத்தூரில் கொட்டிய கனமழை: ரயில்கள் தாமதம்

By வ.செந்தில்குமார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ஆம்பூர் அருகே பாலாற்றில் நுரையுடன் வந்த தோல் கழிவுநீர் மாதிரி, ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை நேற்று இரவு 10 மணிக்குப் பிறகு தொடங்கி, பரவலான மழை பதிவானது. ஒருசில இடங்களில் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 7 மணி வரை கனமழை பதிவானது.

ஆம்பூரில் 101.60 மி.மீ. மழை:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 8.20 மி.மீ., ஆற்காட்டில் 19.20, காவேரிப்பாக்கத்தில் 25, சோளிங்கரில் 7, வாலாஜாவில் 37.20, அம்மூரில் 1 மி.மீ மழை, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 57, ஆம்பூரில் அதிகபட்ச அளவாக 101.50, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 61.80, நாட்றாம்பள்ளியில் 62.40, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 88, வாணியம்பாடியில் 86, திருப்பத்தூர் நகரில் 11.50 மி.மீ. மழை, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 18.40, காட்பாடியில் 15.40, மேல் ஆலத்தூரில் 49.80, பொன்னையில் 25.20, வேலூரில் 3, அம்முண்டி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 7.20 மி.மீ. மழை பதிவானது.

ரயில்கள் தாமதம்:

கனமழையால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 3, 4-வது நடைமேடைப் பகுதியில் உள்ள தண்டவாளம் முழுவதும் மழை நீர் தேங்கி, ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மற்ற நடைமேடை தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் வைத்து அகற்றப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை செல்லும் ஏலகிரி விரைவு ரயில், இன்று (ஆக.10) காலை 5 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து சேலம் மற்றும் பெங்களூருவுக்கு வந்து செல்லும் ரயில்கள் 1, 2 மற்றும் 5-வது நடைமேடை வழியாகத் திருப்பி விடப்பட்டன. இதனால், சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரயில்கள் சென்றன.

ஏலகிரி மலையில் மண் சரிவு:

ஏலகிரி மலைப் பாதையில் 3, 8-வது வளைவுகளில் கனமழை காரணமாகப் பாறைகள் உருண்டன. இதனால் மண் சரிவு ஏற்பட்டு பேருந்துப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. இந்தத் தகவலை அடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறைகளை அகற்றி, போக்குவரத்தைச் சரி செய்தனர்.

அதேபோல், சுற்றுலாத் தலமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய வெள்ள நீர் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருக்க வனத்துறையினர் தடையை ஏற்படுத்தினர்.

பாலாற்றில் வெள்ளம்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள தரைப்பாலத்தைக் கடந்து வெள்ளநீர் சென்றதை ஏராளமான பொதுமக்கள் ரசித்துச் சென்றனர். அதேபோல், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றுப் பாலத்தைக் கடந்து வெள்ள நீர் சென்றதைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

காட்டாற்று வெள்ளம்:

மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளக்கல் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள விண்ணமங்கலம் ஊராட்சிக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் கிணறு முழுவதும் வெள்ள நீரால் நிரம்பியதுடன் அருகில் உள்ள தென்னந்தோப்புகள் வழியாகவும், நெல், கரும்பு பயிரிட்டிருந்த விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் விண்ணமங்கலம் கிராமத்தில் தென்னந்தோப்பில் புகுந்த வெள்ளநீர்.

தோல் கழிவுநீர் கலப்பு:

ஆம்பூர் மாராப்பட்டு பாலாற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு இல்லாத நிலையில், கழிவுநீர் மட்டும் நுரை பொங்கும் அளவுக்கு வந்தது. மழை வெள்ளத்தை நம்பி அங்குள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரைப் பாலாற்றில் திருப்பிவிட்டதாக புகார் எழுந்தது. இந்தத் தகவலை அடுத்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவுநீர் மாதிரியைச் சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்