அரசாணை வெளியிட்டும் புதுச்சேரியில் செயல்பாட்டுக்கு வராத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம்

By செ. ஞானபிரகாஷ்

அரசாணை வெளியிட்டுப் பத்து மாதங்களாகியும் புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

புதுவை பிரதேச அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக்காக நலவாரியம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. 10 மாதங்கள் ஆகியும் நலவாரியம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுபற்றி புதுவை பிரதேச சிஐடியூ பொதுச் செயலாளர் சீனுவாசன் கூறுகையில், "அரசாணை வெளியிட்டும் நலவாரியம் செயல்பாட்டுக்கு வராதது தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திராவில் பல வகையில் தொழிலாளர்களுக்கு தனித்தனி வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆட்டோ, சாலையோர வியாபாரிகள், சுமைப் பணி, தையல் எனப் பல வகைப்பட்ட தொழிலாளர்களுக்குத் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பாதிப்புக்கு ஆளான தொழிலாளர்களுக்கு அந்தந்த நலவாரியங்கள் மூலமாகப் பலவகையான பொருளாதார உதவிகள் அரிசி, மளிகை, காய்கறிகள் தருவது போன்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

புதுவையில் ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கடுமையான போராட்டத்துக்குப் பின் நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், இவ்வாரியம் செயல்படாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை அரசு இனியும் காலம் கடத்தாமல் நலவாரியத்தைச் செயல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் என்பதால் முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE