முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மாநிலம் முழுவதும் 52 இடங்களில் நடக்கிறது

By செய்திப்பிரிவு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் இன்று (ஆக.10) லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 52 இடங்களில் சோதனை நடக்கிறது.

கோவை பாலக்காடு சாலை, சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இவர், வழிகாட்டுதல் குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர மாவட்டச் செயலாளர் ஆகிய கட்சிப் பொறுப்புகளில் உள்ளார்.

தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள எஸ்.பி.வேலுமணி, கடந்த 2013-16-ம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தும் போலீஸார். | படம் : ஜெ.மனோகரன்.

ஊழல் குற்றச்சாட்டுகள்

அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும், தமிழக கிராமங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுவதில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டன. அதேபோல், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள், ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளில் தேவையான தொகையை விட அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டு மோசடிகள் நடந்துள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. மேலும், தனது துறையில் அதிக ஊழல்கள் செய்த எஸ்.பி.வேலுமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாாிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்து விட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று புகார் அளித்து இருந்தார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் பி.கங்காதரன் சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள் | படம் : ஜெ.மனோகரன்.

போலீஸார் வழக்குப் பதிவு

அதில், ‘‘கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு காலகட்டம் வரை, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், பினாமி நிறுவனங்களுடன் இணைந்து, அரசு விதிகளை மீறி ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி ஊழல் செய்துள்ளார். கோவை மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ.364 கோடி ஊழல் செய்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதர், பினாமி நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் பேரில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சந்திரபிரகாஷ், கே.சி.பி நிறுனத்தின் இயக்குநரும், பங்குதாரரருமான ஆர்.சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் உரிமையாளர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாாளர் கு.ராஜன் ஆகியோர் மீதும், கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவனம், தி ஏஸ் டெக் மெஷினரி கம்பான்மென்ட்ஸ் நிறுவனம், கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனம், கன்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேஷன்ஸ், வைடூரியா ஹோட்டல்ஸ், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட்ஸ் நிறுவனம், ஏரஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மீது என மொத்தம் 17 பேர் மீது கூட்டுசதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் அன்பரசன் வீடு, வடவள்ளியில் உள்ள இன்ஜினீயர் சந்திரசேகர் வீடு, புலியகுளத்தில் உள்ள கேசிபி நிறுவன அலுவலகம், மதுக்கரையில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா வீடு, கே.சந்திரபிரகாஷ் வீடு உள்ளிட்ட கோவையில் மட்டும் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் சோதனை, காலை 7.05 மணி முதல் நடந்து வருகிறது.

அதேபோல், சென்னையில் 15 இடங்கள், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை எம்.எல்.ஏக்கள் விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியிடம் மேற்கண்ட ஊழல்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

குவிந்த தொண்டர்கள்

கோவையில் சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மேற்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வீட்டில் இருந்தவர்களிடமும், வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு இன்று காலை திரண்டனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்