வெள்ளை அறிக்கை; நிதிநிலையைச் சீரமைக்க ஆக்கபூர்வமான சீர்திருத்தங்கள் வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிதி நிலையைச் சீரமைக்க ஆக்கபூர்வமான சீர்திருத்தங்கள் வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஆக. 09) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடியாகவும் அதிகரித்துவிட்டதாக, அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கடன் சுமை குறித்த விவரங்கள் எதுவும் புதிதல்ல. ஏற்கெனவே அதிமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்துவிட்டதாகவும், செலவுகள் அதிகரித்துவிட்டதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

இதற்கான பதில்கள் அவர் அளித்த நேர்காணலிலேயே உள்ளன. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் அதிகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நிதியமைச்சர், கடன் சுமையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார் என்று நம்புவோம்.

தமிழகத்தில் தேவையற்ற மானியங்கள் அதிகரித்துவிட்டன; ரூ.4,000 மானியம் உள்ளிட்ட அரசின் பல உதவிகள் வருமான வரி செலுத்தும் பணக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றன; இதற்குக் காரணம் தமிழக மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இல்லாததுதான்; அந்தத் தகவல்களைத் திரட்டி இத்தகைய உதவிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

அவரது வெளிப்படையான பேச்சு வரவேற்கத்தக்கதுதான். பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலை.

அதே நேரத்தில், வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ள சில கருத்துகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய அறிவிப்புகளுக்கு முன்னோட்டமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை; சொத்து வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை; 15 ஆண்டுகளாக வாகன வரி உயர்த்தப்படவில்லை; பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று நிதியமைச்சர் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, மின் கட்டணம், பேருந்துக் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டணங்கள் உயர்த்தப்படக் கூடாது; இவற்றை உயர்த்துவதற்கான கருவியாக வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படக் கூடாது. கரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில் இது கூடுதல் சுமையாக அமைந்துவிடும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களாக இருந்தாலும், மின்சார வாரியமாக இருந்தாலும் அவற்றில் ஏற்படும் இழப்புகளுக்குக் காரணம் கட்டணக் குறைவு இல்லை. மாறாக, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.

மின்சார வாரியத்தில் மின்சாரத்தைக் கொண்டுசெல்வதில் ஏற்படும் இழப்பைக் குறைப்பதன் மூலமாகவும், போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துக் கட்டணம் மூலமான வருவாயை மட்டும் முதன்மையாகக் கொள்ளாமல், விளம்பரங்கள், பிற ஆதாரங்களின் மூலமாக வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றை லாபத்தில் இயக்க முடியும்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் கட்டணங்களை மட்டும் உயர்த்தினால், அது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு ஒப்பாகவே அமையும். அதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குவது சாத்தியமற்றது ஆகும்.

தமிழக அரசின் நிதிநிலை கடந்த பல ஆண்டுகளாகவே அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்போதே, இப்போது வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் பொதுத்தளத்தில் இருந்தன. இவற்றை அறிந்துதான் தேர்தல் வாக்குறுதிகளை திமுக வழங்கியது. எனவே, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய அனைத்து வாக்குறுதிகளையும் இயன்றவரை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவரது உரையில் குறிப்பிட்டவாறு தமிழகம் பணக்கார மாநிலம்தான். இந்தியாவிலேயே தமிழக அரசுக்குதான் அதிக சொத்துகள் உள்ளன. அந்தச் சொத்துகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பதையும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதன் மூலமாகவே, தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க முடியும்.

வரி ஏய்ப்பைத் தடுப்பதே அரசின் முதன்மைப்பணியாக இருக்க வேண்டும். மாநில அரசின் வரி ஆதாரங்கள் குறைந்துவரும் சூழலில், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வரி அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அது நிர்வாகச் சீர்திருத்தங்களின் மூலமாகச் செய்யப்பட வேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலமாக இருக்கக் கூடாது என்பதைத் தமிழக அரசுக்கான பாமகவின் ஆலோசனையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்