தமிழகத்தில் ஆகமவிதிகளை கடைபிடிக்காமல் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் பிஎஸ்ஆர் முத்துக்குமார் சிவாச்சாரியார் தாக்கல் செய்த மனு:
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கடந்த ஜூலை6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, ஆக.7-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. ஆகமவிதிகளின்படி செயல்படும் தமிழககோயில்களில் உள்ள இந்த பணியிடங்களுக்கு, 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அர்ச்சகர் பணிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களை எங்கு, எப்படி அமைப்பது, பிரதான கடவுள், பரிவார மூர்த்திகளின் சன்னதி, அன்றாட பூஜை, வழிபாட்டு முறைகள், சாத்துப்படி, நைவேத்யம், திருவிழாக்கள் என கோயில்களின் மரபு சார்ந்த அனைத்தும் ஆகமவிதிகளின்படியே நடந்து வருகின்றன.
இந்த ஆகமவிதிகளை முழு மனதுடன் முறையாக கற்று, தொழில் ரீதியாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார் ஆக முடியும்.
கோயில்களில் நடைபெறும் தினசரி பூஜை மற்றும் கடவுள் வழிபாடுகளில் சிறு தவறு செய்தாலும் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகமவிதியில் கைதேர்ந்த, அனுபவமிக்க பலரும் 10-ம் வகுப்பில் தேர்ச்சியோ, ஓராண்டு சான்றிதழ் படிப்போ முடிக்காதவர்கள். அவர்கள் சிறுவயதிலேயே தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக இறைபணிக்கு அர்ப்பணித்து, குருகுலக் கல்வி மூலமாக தங்கள் குருவிடம் தீட்சை பெற்று,குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகமவிதிகளை கடுமையாக பின்பற்றி, வேத மந்திரங்கள், வழிபாட்டு முறைகளை முறையாக கற்றவர்கள். அதன்பிறகு, ஹோமம், கும்பாபிஷேகம், பூஜை வழிபாடுகளில் 3 முதல்5 ஆண்டுகள் அனுபவம் பெற்றால் மட்டுமே அர்ச்சகர் என்ற நிலைக்கு வர முடியும்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆகமவிதிகளை முழுமையாக கடைபிடித்தே அர்ச்சகர் உள்ளிட்ட பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று சேஷம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்துவாக இருப்பதற்கான தகுதிகளை உடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து எங்களது சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அர்ச்சகர் பணி நியமனம் என்பது ஆகமவிதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என மீண்டும் உறுதி செய்துள்ளது.
எனவே, ஆகமவிதிகளின்படி பாரம்பரிய மரபு மற்றும் மத சடங்குகளில் முறையான பயிற்சி மேற்கொண்டவர்களை மட்டுமே அர்ச்சகர், ஓதுவாராக நியமிக்க முடியும்.
அறிவிப்பாணை சட்டவிரோதம்
ஆனால், அறநிலையத் துறை கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில், இந்த தகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பாணை சட்ட விரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.வள்ளியப்பன், பி.ஐயப்பன் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் என்ஆர்ஆர் அருண் நடராஜன் ஆஜராகி, இதுதொடர்பாக பதில் அளிக்க அவகாசம் அளிக்குமாறு கோரினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையைவரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி,மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago