தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று (ஆக. 08) காலமானார். அவருக்கு வயது 84.

திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை எம்.பி., எம்எல்ஏ, சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவராகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து, அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தமிழகத்துக்குப் பெரும் பெருமை சேர்த்தவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் இரங்கல்.

மறைந்த காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். தமிழக நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்.

திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓபிஎஸ் - அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவரும், அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் தோழமையோடு பணியாற்றியவருமான திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகவும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியுள்ளார்.

திண்டிவனம் ராமமூர்த்தியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்ட ராமமூர்த்தி, அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார். 1990-களின் பிற்பகுதியில், காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாக வழிநடத்தினார்.

காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர். தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் நேர்மையாக இருந்து சிறப்பு சேர்த்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் தொடர்பு வைத்திருந்தவர். பாமகவின் கொள்கைகளைப் பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். திண்டிவனம் வரும் போதெல்லாம் என்னைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவர் மீது எனக்கும் அன்பும், மரியாதையும் உண்டு.

திண்டிவனம் ராமமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

தமிழகத்தில் காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் மாநிலச் செயலாளராக, பொதுச் செயலாளராக, சட்டப்பேரவை உறுப்பினராக, சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சித் தலைவராக, மாநிலங்களவை நியமன உறுப்பினராக எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட திண்டிவனம் கே.ராமமூர்த்தி காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் தலைமை மீது மிகுந்த பற்றுகொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

சட்டப்பேரவை உறுப்பினராக, மேலவை உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர். 86 வயது நிரம்பிய திண்டிவனம் கே.ராமமூர்த்தியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

காமராஜர் தலைமையில் மாணவப் பருவத்தில் இருந்து பணியாற்றியவர். ஜி.கே.மூப்பனாரோடும் இணைந்து பணியாற்றியவர். மேலும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடும் பழகிய பெருமைக்குரியவர்.

தமிழக சட்டமேலவை (1967 – 71) மற்றும் தமிழக சட்டப்பேரவை (1976 – 84) ஆகியவற்றில் உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (1984 – 90) தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

தான் சார்ந்திருந்த பொறுப்பிலிருந்து இயக்கப் பணிக்காகவும், மக்கள் பணிக்காகவும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர்.

அவரது மறைவு தமிழக அரசியலுக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் த.மா.கா சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

காமராஜர் காலம்தொட்டு மூப்பனாரின் காலம் வரை தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் மாநிலச் செயலாளர் தொடங்கி மாநிலத் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளில் இருந்து காங்கிரஸ் வளர பாடுபட்டு சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பிரதிநிதியாகத் தொடர்ந்து பணியாற்றி தமிழ்கத்துக்கும் காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்ட திண்டிவனம் ராமமூர்த்தி வயது மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் துணிச்சல் மிக்க காங்கிரஸ் முன்னணி தலைவராகவும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமானவராகவும், பொது வாழ்க்கையில் சிறப்பான தலைவராகச் செயல்பட்டவர் திண்டிவனம் ராமமூர்த்தி.

அவரின் மறைவு வருத்தம் தருகிறது. அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

தேசிய சிந்தனையோடு பல்லாண்டு காலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தமான அவரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்