ஒடிசாவின் இனிக்கும் குடிநீர் திட்டம்; தமிழகத்தில் நனவாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர் ஒடிசாவில் சாத்தியமான கனவு, தமிழகத்தில் நனவாவது எப்போது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 08) வெளியிட்ட அறிக்கை:

"ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் குழாய்கள் மூலம் ஐஎஸ்ஓ 10500 தரம் கொண்ட மிகவும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் குழாய்களிலும், பொது குடிநீர் குழாய்களிலும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதை விட சுவையான, தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் செய்தி தான். இதற்குக் காரணமான நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு பாராட்டுகளுக்குரியது.

உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தான் மிகவும் தரமான குடிநீர் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில் கழிப்பறையில் வரும் தண்ணீரைக் கூட பருகலாம்; அது மிகவும் சுவையாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்று கூறுவார்கள்.

ஒருமுறை நான் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது அங்குள்ள விடுதி அறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் கேட்டபோது கழிப்பறையில் உள்ள குழாயில் பிடித்து குடிக்கலாம்; இங்கு எல்லா நீரும் குடிநீரே என்று கூறினர். இவை மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல... முழுக்க முழுக்க உண்மை.

அந்த நகரங்களில் வழங்கப்படுவது போன்ற தூய்மையான ஐஎஸ்ஓ 10500 தரம் கொண்ட குடிநீர் பூரி நகரில் இப்போது குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இத்தகைய தரமான குடிநீரை குழாய்களில் வழங்கும் முதல் நகரம் பூரி நகரம் ஆகும். ஒடிசாவில் மேலும் 17 நகரங்களில் இதேபோல் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

அண்மைக்காலங்களில் நான் மிகவும் வியந்து படித்தது இந்த செய்தியைத் தான். இது ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், ஒடிசாவை விட அதிக வளர்ச்சியும், வலிமையான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பமும் கொண்ட தமிழகத்தில் அது இன்னும் சாத்தியமாகவில்லையே என்ற சலிப்பும், வருத்தமும் மறுபுறம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் இத்தகையத் திட்டம் சாத்தியமாகாததற்கு பொருளாதாரமோ, தொழில்நுட்பமோ காரணம் அல்ல. மாறாக தொலைநோக்கு பார்வை இல்லாததே காரணம். அது தான் தமிழகத்தின் குறை.

'விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீருக்கு மேலான தரத்தில் குடிநீர்த் தேவைக்கான தண்ணீர் தூய்மைப்படுத்தி வழங்கப்படும்' என்று 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பாமக வாக்குறுதி அளித்திருந்தது. இதைத் தான் ஒடிசா அரசு சாத்தியமாக்கியுள்ளது.

குழாய்கள் மூலம் தூய்மையான, சுவையான குடிநீரை வழங்குவது சாத்தியமில்லாத ஒன்றல்ல. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், தொலைநோக்குப் பார்வையும் இருந்தால் இது சாத்தியமே.

ஒடிசா மாநிலத்தில் இந்த அற்புத திட்டத்தை செயல்படுத்தியவர் ஒரு தமிழர் தான். ஒடிசாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக பணியாற்றி வரும் தமிழகத்தின் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜி.மதிவதனன் என்பவர் தான் இத்திட்டத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அதிகாரி ஆவார்.

ஒடிசா மாநில குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் சிலரை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்கு குடிநீரை தூய்மைப்படுத்தி வழங்கும் முறை குறித்து பயிற்சி பெற்று வரச் செய்த மதிவதனன், அந்த அதிகாரிகள் மூலம் தான் திட்டத்தை செயல்படுத்த வைத்திருக்கிறார்.

பூரிக்கு அருகில் உள்ள பார்கவி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து தூய்மைப்படுத்தி தான் இனிக்கும் குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணிநேரமும் வழங்கப்படும் இந்த நீரை யார் வேண்டுமானாலும் ஆய்வகங்களில் சோதித்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தத் திட்டத்தை அப்படியே தமிழகத்திலும் செயல்படுத்தலாம்.

தூய்மையான, சுவையான குடிநீரை குழாய்கள் மூலம் வீடுகளுக்கும், பொது இடங்களுக்கும் வழங்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பொருட்செலவு அதிகமாகாது. தமிழக மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வழங்கப்படும் குடிநீர் கூட குடிப்பதற்கு தகுதியானது அல்ல என்பது தான் உண்மை. சென்னை போன்ற நகரங்களில் குடிநீர் என்ற பெயரில் வழங்கப்படும் தண்ணீர் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது.

குடிப்பதற்காக கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்குவதற்காக மட்டும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 வரை செலவழிக்கின்றன. ரூ.25,000 கொடுத்து சுத்திகரிக்கும் எந்திரம் வாங்கினால் கூட, ஆண்டுக்கு ரூ.8,000 வரை பராமரிப்புச் செலவாகிறது. ஆனாலும், தரமான குடிநீர் கிடைப்பதில்லை.

ஒடிசாவில் செயல்படுத்துவது போன்ற திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்தினால், குடிநீருக்காக மக்கள் செலவழிக்கும் பணத்தில் ரூ.20,000 கோடி வரை ஆண்டுக்கு மிச்சமாகும். மேலும், தூய்மையான குடிநீர் வழங்குவதால் நோய்கள் ஏற்படாது. மக்களின் வாழ்நிலையும், ஆரோக்கியமும், பொருளாதாரமும், அவற்றின் பயனாக தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் வெகுவாக அதிகரிக்கும். இவற்றால் கிடைக்கும் லாபங்களுடன் ஒப்பிடும்போது இத்திட்டத்துக்கான செலவு மிகவும் குறைவு தான்.

தூய்மைக் குடிநீர் திட்டத்தின்படி ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் 40 லிட்டர் குடிநீரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் தண்ணீருக்கு கட்டணமும் விதிக்கப்பட்டால் குடிநீர் வீணாக்கப்படுவது குறைவதுடன், அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.

தூய்மையான குடிநீர் குழாய்களில் கிடைத்தால் பாட்டில் குடிநீர் பயன்பாடும், அதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதும் குறையும். இது போல பல நன்மைகள் இத்திட்டத்தால் விளையும். தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, தூய்மைக் குடிநீர் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்போது தமிழகத்தில் செயல்படுத்த முடியாதா என்ன?

எனவே, ஒடிசாவில் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது போன்று ஐஎஸ்ஓ 10500 தரம் கொண்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்