திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சோழவரம் அருகே காரனோடை - கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காரனோடை -சண்முகா நகரைச் சேர்ந்த கண்ணையா லால் மகன் அர்ஜுன்(14), சண்முகா நகரில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு வந்திருந்த திருவள்ளூர் - ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சத்யநாராயணன் (15), சென்னை - பெரம்பூரைச் சேர்ந்த சையது சானுல்லா மகன் சையது ரகமதுல்லா(15) ஆகியோர் நண்பர்கள்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு வெளியே வந்து, சண்முகா நகர் பகுதியில் விளையாடச் சென்றனர். ஆனால், அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அர்ஜுனின் பெற்றோர், சத்யநாராயணன், சையது ரகமதுல்லா உறவினர்கள் பல்வேறு இடங்களில், அவர்களைத் தேடினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன் தினம்இரவு, காரனோடை-கொசஸ்தலை ஆற்றுக்கரையில் சிறுவர்கள் 3 பேரின் ஆடைகள் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த சோழவரம் போலீஸார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு, தீயணைப்பு வீரர்கள் கொசஸ்தலை ஆற்றினுள் சிறுவர்களை தேடினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த தேடுதல் பணியில் நள்ளிரவு 12.30 மணியளவில், அர்ஜுன், சத்யநாராயணன், சையது ரகமதுல்லா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட 3 சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள சோழவரம்போலீஸாரின் விசாரணையில், வீட்டுக்குத் தெரியாமல் கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க வந்தசிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, பள்ளத்தில்சிக்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், கொசஸ்தலை ஆற்றில்காரனோடை பகுதியில் மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிக ஆழமான பள்ளங்கள் உள்ளன. அப்பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீர், சிறுவர்களின் உயிரை பறித்துள்ளன என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE