இந்தியாவின் மகள் வந்தனா; இழிவை நீக்கி புகழை மீட்போம்!- சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்குக் கடிதம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் மகள் வந்தனாவுக்கு நேர்ந்த அவமானத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாகச் சரி செய்து, நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்குக் கடிதம் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

''டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்ற இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சிலர் அநாகரிக நடனமாடி பட்டாசு வெடித்தனர். அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியான வசைபாடப்பட்டது. எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சல் எழுப்பப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இது உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளது. தேசத்திற்காக விளையாடும் பெருமைமிக்க வீரர்கள் மனதை ரணமாக்கியுள்ளது.

இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்... கால் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைத் தகுதியாக்கிய தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்குப் பங்களித்தது வந்தனாதான்.

இம்முறை இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதைப் பார்க்க, சரியாக ஒரு தொலைக்காட்சி கூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மன உளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலைநாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளைக் கேட்கக் கேட்க நெஞ்சு விம்முகிறது. இந்த வீராங்கனைகளை நாம் சரியாகத்தான் கொண்டாடுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.

வந்தனா கட்டாரியா

தேசம் கொண்டாடுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள். அரசு என்ன செய்யவேண்டும்?

* மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாக வந்தனாவுக்கு நேர்ந்த அவமானத்தைச் சரி செய்து, நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

* அந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசால் பெருமை செய்யப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி சிறப்புப் பரிசை அறிவிக்க வேண்டும்.

* குற்றவாளிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதலாம்.

* நாடு திரும்பும் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்குப் பெரிய பாராட்டு விழா நடத்தலாம்.

* வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள் என எனது கடிதத்தில் தெரிவித்துள்ளேன்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்