மூன்றாம் ஆண்டு நினைவுதினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

By செய்திப்பிரிவு

கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஆக. 07 அன்று காலமானார். அவருடைய 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆக. 07) அனுசரிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பின், திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதியின் நினைவு தினம் பெரியளவில் அனுசரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கரோனா தாக்கம் காரணமாக, திமுகவினர் தங்கள் இல்லங்களின் முன்பு கருணாநிதியின் திருவுருவப் படத்தை வைத்து மரியாதை செலுத்துமாறு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பலரும் கருணாநிதியை நினைவுகூர்ந்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சிஐடி இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை.

பின்னர், கருணாநிதியின் சிஐடி இல்லம், கோபாலபுரம் இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் மரியாதை.

இந்நிகழ்வுகளின் போது, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்.பி-க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE