கரோனா பரவல்; ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் கட்டுப்பாடுகளா?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் என்ற அளவில் கரோனா தொற்று பதிவானது. அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொற்று எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்தது.

ஆனால், கடந்த சில தினங்களாக, சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. நேற்று (ஆக. 05) 1,997 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 9-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 06) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர், தங்கள் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE