கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு அரசு செய்தது என்ன?- வைகோ கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும், கைத்தறித் தொழிலாளர்களின் நலன் காக்கவும், அரசு செய்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் இந்தியாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. நாளை இந்திய கைத்தறி நெசவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இதற்கிடையே கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும், கைத்தறித் தொழிலாளர்களின் நலன் காக்கவும், அரசு செய்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கீழ்க்காணும் கேள்விகளுக்கு, துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டங்கள், எந்த அளவில் செயல்படுத்தப்படுகின்றன?

2. அந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதா? கடந்த மூன்று ஆண்டு புள்ளி விவரங்களைத் தருக;

3. அவ்வாறு குறைந்து இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன? குறிப்பாகத் தமிழ்நாடு குறித்த விவரங்கள் தேவை;

4. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் யாவை?

இதற்குத் துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த விளக்கம்

1 முதல் 4 கேள்விகளுக்கான விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கின்றேன்;

1. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (National Handloom Development Programme- NHDP) பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்ட கைத்தறிகள் மற்றும் உதிரி உறுப்புகளை வாங்குவதற்கு, தகுதி உள்ள கைத்தறி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது; வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்துவதற்கும், பல்வேறு வகையான தரங்களில் கைத்தறித் துணிகளை ஆக்குவதற்கும், கட்டமைப்பு வளர்ச்சிக்கும், இந்தியாவிற்கு உள்ளேயும், அயல்நாடுகளிலும், கைத்தறித் துணிகளைச் சந்தைப்படுத்துவதற்கும், முத்ரா திட்டத்தின் கீழ் சலுகையுடன் கூடிய நிதி உதவி அளிக்கப்படுகின்றது; தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நாடு முழுமைக்கும் பொருந்தும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், (2018-2021) தேசிய கைத்தறி வளர்ச்சி முகமையின் சார்பில், மானிய உதவிகளுக்காகச் செலவிடப்பட்ட ரூ.347.65 கோடி உள்பட, 353.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசுகள் வகுத்துத் தருகின்ற திட்டங்களின் அடிப்படையில்தான், வளர்ச்சியை எட்ட முடியும். வங்கிகளின் உள்கடன் மதிப்பீட்டு அளவுகோலின்படி முத்ரா திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்படுகின்றது. கைத்தறித் துணிகளை விற்பதற்கான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாகக் கடந்த ஓராண்டில் கரோனா தொற்று ஏற்படுத்திய முடக்கத்தால், அனைத்துத் துறைகளும் பாதிப்பு அடைந்ததுபோல், கைத்தறித் துணிகளுக்கான கச்சாப் பொருட்கள் தட்டுப்பாடு, சந்தை நடவடிக்கைளிலும் கடுமையான முடக்கம் ஏற்பட்டது.

உறுப்பினர் கேட்டுள்ள காலகட்டத்தில், தமிழ்நாட்டிலும், இதர மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளில் கைத்தறி வளர்ச்சிப் பணிகள் குறித்த புள்ளிவிவரங்கள்:

தமிழ்நாட்டில், 21 சந்தை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன; இந்திய அளவில் 324;

தமிழ்நாட்டில், 1438 கைத்தறி நெசவாளர்கள், தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெற்றுள்ளனர்; இந்திய அளவில் 9924;

தமிழ்நாட்டில் 1955 கைத்தறி நெசவாளர்களுக்குத் தரம் உயர்த்தப்பட்ட புதிய கைத்தறிகள், உதிரி உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன; இந்திய அளவில் 9924;

கைத்தறி விளக்கு அலகுகள் (Lightning Units) தமிழ்நாட்டில் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; இந்திய அளவில் 2597;

கைத்தறித் தொழிற்கூடங்களைக் கட்டுவதற்கு, தமிழ்நாட்டில் 118 பேருக்கும், இந்திய அளவில் 1139 பேருக்கும் நிதி உதவிகள்;

தமிழ்நாட்டில் 41,568 பேருக்கும், இந்திய அளவில் 25,193 பேருக்கும், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவிகள்;

ஒட்டுமொத்தத் தொகை: தமிழ்நாட்டுக்கு ரூ.207.23 கோடி; இந்திய அளவில் ரூ.159.92 கோடி.

கைத்தறி நெசவுத் துறை ஒருங்கிணைக்கப்படவில்லை; அது கிராமப்புறங்களில் மரபு வழியாகத் தொடர்ந்து வருகின்றது. கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு பிரச்சினைகள், தடைகளை எதிர்கொள்வதற்கும், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சகம், கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

1. கைத்தறி நெசவுத் துணிகளை, அரசின் பல்வேறு துறைகளுக்குக்கு விற்பதற்கு ஏதுவாக, அரசு மின் சந்தை (Government e-market Place - GeM) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுமையும், 1.50 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், இணையவழிச் சந்தையில் இணைந்துள்ளனர்.

2. கைத்தறி நெசவை மேம்படுத்துவதற்காகவும், துணிகளைச் சந்தைப்படுத்தி நல்ல வருமானம் ஈட்டுவதற்காகவும், பல்வேறு மாநிலங்களில் 125 கைத்தறி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3. முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கான சலுகைக் கடன் (Concessiona Credit), ஒரு நெசவாளருக்கு, 20 விழுக்காடு அல்லது ஆகக்கூடுதலாக ரூ.10,000 மானியத்துடன் தரப்படுகின்றது. 7 விழுக்காடு வட்டிச் சலுகையுடன், மூன்று ஆண்டுகளுக்கு, கடன் பொறுப்பு உறுதி உண்டு.

4. டெல்லி, மும்பை, வாரணாசி, அகமதாபாத், ஜெய்ப்பூர், புவனேஸ்வர் மற்றும் குவாஹாட்டி நெசவாளர் பணி மையங்களில், தேசியத் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியுடன் (NIFT), வடிவமைப்பு வள மையங்கள் (Design Resource Centres) ஏற்படுத்தப்பட்டுள்ளன. கைத்தறி நெசவில் வடிவமைப்பு சார்ந்த புதுமைகள், கைத்தறி நெசவாளர், ஏற்றுமதியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக, மாதிரிகள் மற்றும் தரமேம்பாட்டு வடிவமைப்புக் களஞ்சியங்கள் (Design Reositories) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

5. கைத்தறித் துணிகளைச் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக, கைத்தறித் துணிகள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம், பல்வேறு பன்னாட்டுக் கண்காட்சிகளை, இணையம் வழியாக ஏற்பாடு செய்து வருகின்றது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 12 கண்காட்சிகள், இணையம் வழியாக நடத்தப்பட்டன.

கச்சாப் பொருள்கள் வாங்குவதற்கும், சாயம் ஏற்றுதல், துணிகளில் அச்சு, விற்பனை வளாகங்கள் அமைத்தல், வடிவமைப்புக் கல்வி, மதிப்புக் கூட்டுதலுக்கும், பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொள்கைத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளின்படி, மத்திய அரசு, மாநில அரசுகள், கைத்தறி வளர்ச்சி முகமைகளின் உதவியுடன், கைத்தறி வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்தத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை, மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்காணித்து வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்''.

இவ்வாறு மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்