தமிழகத்தில் விரைவில் கரோனா தொற்று முற்று பெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் விரைவில் கரோனா தொற்று முற்று பெறும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டையில் இன்று (ஆக. 06) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கேரளாவிலிருந்து ரயில் மூலம் வரும் பயணிகளை ரயில் நிலையங்களில் பரிசோதிக்க அறிவுறுத்தியுள்ளோம். இன்றோ, நாளையோ அதனை நான் நேரில் ஆய்வு செய்வேன்.

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 48 ஆயிரம் என்ற அளவில் நேற்று ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே தினமும் 1.5 லட்சம் என்ற அளவில் தமிழகத்தில்தான் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனால், லேசான அளவில் தொற்றின் எண்ணிக்கை உயர்கிறது. தினமும் 30-40 என்ற அளவில்தான் உயர்கிறது. ஆனாலும், 1.2% என்ற அளவில்தான் பாசிட்டிவ் சதவீதம் உள்ளது. முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். விரைவில் இந்தத் தொற்று முற்று பெறும்.

தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2 கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 650 தடுப்பூசிகள் இதுவரை வந்துள்ளன. இதுவரை 2 கோடியே 26 லட்சத்து ஆயிரத்து 212 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கையிருப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் உள்ளன.

இன்று 3 லட்சத்து 32,000 தடுப்பூசிகள் வரும். மொத்தமாக 11 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இவை, 2-3 நாட்களுக்கு தாராளமாகச் செலுத்தலாம்.

சி.எஸ்.ஆர். நிதியின் மூலம், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் செலுத்துவதற்கு, 20 லட்சத்து 38 ஆயிரத்து 680 தடுப்பூசிகளைத் தனியார் வாங்கியுள்ளன. இதில், 16 லட்சத்து 34 ஆயிரத்து 959 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.

நேற்று இரவு வரை, 4 லட்சத்து 3 ஆயிரத்து 721 தடுப்பூசிகள் தனியாரிடம் இருப்பில் உள்ளன். மொத்தமாக 2 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரத்து 171 பேருக்கு இரு தவணை டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக, தமிழகத்துக்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை. இன்னும் 9.5 கோடி தடுப்பூசிகள் தேவை.

இம்மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அதனை நான்கு நாட்களாகத் தந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் 72 லட்சம் தடுப்பூசிகள் தந்ததைச் சிறப்பாகச் செலுத்தினோம். தமிழக அரசு கூடுதலாகச் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பாராட்டு தெரிவித்தது. இம்மாதமும் அதிகமாகத் தடுப்பூசிகள் தந்தால் 3.5 கோடியை இறுதிக்குள் செலுத்திவிடுவோம்.

2.5 கோடி பேரில் சுமார் 60 லட்சம் பேர் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருப்பார்கள்.

கடந்த ஆட்சியில் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் அறையில் மின்விசிறி கூட இல்லை. வெறும் தடுப்புகள்தான் உள்ளன. பெயர்ப்பலகைதான் இருந்தது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளது. அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2 மாதங்களில் தாய்ப்பால் ஊட்டும் அறைகள் அமைக்கப்படும். குழந்தைகளுக்கான மருத்துவமனைகளில் இந்த அறைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

ஒரு தாய்ப்பால் வங்கி அமைக்க ரூ.12 லட்சம் செலவாகும். 12 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சைதாப்பேட்டை தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் தந்திருக்கிறேன். அங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தாய்ப்பால் ஊட்டும் அறை அமைக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE