அதிமுகவைக் கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய தூண் மதுசூதனன் என, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஆக. 05) கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அதிமுகவின் அவைத் தலைவரும், அதிமுகவின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
எம்ஜிஆரின் விசுவாசமிக்க தொண்டர், எம்ஜிஆருக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த ரசிகர்; எம்ஜிஆர் கண்ட பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த அதிமுக உடன்பிறப்பு; ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி; அதிமுக தொண்டர்களை எப்பொழுதும் தன் தோளில் வைத்துக் கொண்டாடிய, அதிமுகவின் வேர்களில் ஒருவர் எனப் பலவாறாகவும், மதுசூதனனைப் பற்றி வரலாறு சொல்லும்.
» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
» வட இந்தியாவில் காணாமல் போன 70 வயது மூதாட்டி: 6 மாதம் கழித்து மதுரையில் மீட்பு
அதிமுகவின் சோதனையான காலகட்டங்களில் அதிமுகவைக் கட்டிக்காத்த போற்றுதலுக்குரிய அதிமுகவின் தூண் சரிந்ததே என்று, கண்ணீர்க் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்? உண்மையிலேயே அவரது இழப்பு அதிமுகவுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மதுசூதனன் 1953-ம் ஆண்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதியில் எம்ஜிஆர் பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்ஜிஆர் பெயரில் இரவுப் பாடசாலைகளைத் தொடங்கியவர்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உடன்பிறப்புகள் அனைவராலும் 'அஞ்சா நெஞ்சன்' என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன், எம்ஜிஆர் இயக்கம் தொடங்கியபோது, எம்ஜிஆர் நீக்கப்பட்டதைக் கண்டித்து சிறையில் இருந்துள்ளார்; அதிமுகவுக்காக ஏறத்தாழ 48 முறை சிறை சென்றுள்ளார்.
வடசென்னை மாவட்டத்தில், பகுதிக் கழகச் செயலாளராக, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றிய மதுசூதனனை எம்ஜிஆர் தமிழக மேலவை உறுப்பினராக ஆக்கினார்.
ஜெயலலிதா, 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, சட்டப்பேரவை உறுப்பினராக்கி, அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார். அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர்.
பின்னர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு, 5.2.2007 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மதுசூதனன் அதிமுக அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போதுவரை சீரிய முறையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவர்.
ஏறத்தாழ 70 ஆண்டுகள் எம்ஜிஆரின் புகழ்பாடி, அதிமுக வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வாழ்நாளெல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் விசுவாசத் தொண்டராக வாழ்ந்து மறைந்த மதுசூதனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டுமென்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் சார்பிலும் எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவையொட்டி, 5.08.2021 முதல் 7.08.2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதேபோல், தமிழகம் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழகக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்துக் கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்".
இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago