அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தமிழரல்லாதோர் விண்ணப்பம்; ஆளுநரின் அதிகார மீறல் காரணமா?- திருமாவளவன் கேள்வி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் எந்த நம்பிக்கையில் மனு செய்துள்ளனர்? என்றும், ஆளுநரின் அதிகார வரம்புமீறல்தான் காரணமா? எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இப்பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து 162 பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். இவர்களின் மனுக்களைத் தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட 'தேடல் குழு' பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, வழக்கத்திற்கு மாறாக தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவர் பலர் மனு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது. இவர்கள் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

குறிப்பாக, இவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மொழியை எழுத, பேச அறிந்தவர்களா? இவர்கள் எந்த நம்பிக்கையில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் பதவி கோரி மனு செய்துள்ளனர்?

கடந்த ஆட்சியின்போது அதிமுக அரசின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல், ஆளுநர் தமக்குள்ள அதிகார வரம்புகளை மீறிச் செயல்பட்டதன் விளைவாகவே தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும்கூட, ஆளுநர் வரம்புமீறிச் செயல்படுவார் என்கிற நம்பிக்கைதான் தமிழ் தெரியாத வட இந்திய மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்வதற்குக் காரணமா என்கிற ஐயம் எழுகிறது.

ஏற்கெனவே, பல்வேறு தொழில்கள் மற்றும் பணிகளைச் செய்வதற்கென வட இந்திய மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கானோர் தமிழகத்திற்கு வந்தேறி, குவிந்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறைகளிலும் இன்னபிற தொழிற்சாலைகளிலும்கூட வட மாநிலத்தவர் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் துணைவேந்தர் போன்ற உயர் பதவிகளில் தமிழர் அல்லாத பிறமாநிலத்தவர்கள் அமரத் துடிப்பது எதைக் காட்டுகிறது? தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே, கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கியதும் அவரால் உருவான பல்வேறு சிக்கல்களையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எனவே, தமிழகப் பல்கலைக்கழகங்களில் எந்தவொரு சூழலிலும் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு நியமிப்பது தமிழகத்தின் நலன்களுக்கு எதிரானது; மிகவும் ஆபத்தானது.

அத்துடன், தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தமிழக அரசுதான் தேர்வு செய்ய வேண்டுமென்றும், தமிழக அரசு தேர்வு செய்யும் துணைவேந்தர்களை அவற்றின் வேந்தரான ஆளுநர் அங்கீகரிக்க வேண்டுமென்றும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு தமக்குரிய அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஆளுநர் தமது அதிகார வரம்புகளை மீறும் நிலை வரும்போது அதனை எவ்வகையிலேனும் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது''.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்