'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டது. முதல் கட்டமாக, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில், முதல் கட்டமாக 30 லட்சம் பேர் பயன்பெறுவர்.
1,172 துணை சுகாதார மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமுதாய நல வாழ்வு மையங்கள், சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 26 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் என, 1,400-க்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் தன்னார்வலர்கள், ஆஷா பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் இத்திட்டப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை இன்று (ஆக. 05) கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, சென்னையில் இருந்து நேற்று (ஆக. 04) தனி விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9.50 மணிக்கு சாமனப்பள்ளி கிராமத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது, சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரைகளை முதல்வர் வழங்கினார். 2-வது பயனாளியின் வீட்டுக்குச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையைப் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்காக செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு 3 புதிய வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், விழா மேடைக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் பார்வையிட்டார்.
மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டங்கள், காணொலிக் காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் முதல்வர், ஓசூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார். இதற்காக, ஓசூர், சூளகிரி பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago