குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்டப் பகுதியில் 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

இவற்றில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள706 குடியிருப்புகளுக்கு விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான சிறப்புமுகாம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை 8 மணி முதலே பொதுமக்கள் கூடத் தொடங்கினார். முகாம் 11 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் 10 மணி அளவில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள ஜெராக்ஸ்கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கட்டுங்கடங்காமல் அதிகரிக்கவே, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மக்கள் வரிசைப்படுத்தி அனுப்பப்பட்டனர்.

பொதுமக்கள் அதிக அளவு கூடியதால், முகாமில் மனுக்கள் ஏதும் பரிசீலிக்க முடியவில்லை. மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டு, பொதுமக்களை அனுப்பிவிட்டனர். நண்பகல் ஒரு மணி வரை பொதுமக்கள் தொடர்ச்சியாக வந்து, மனுக்களை அளித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE