தமிழகத்தில் முதல் முறை: வனத்துக்குத் திரும்ப அனுப்பி ரிவால்டோ யானைக்கு மறுவாழ்வு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ரிவால்டோ யானையை, தமிழக வனத்துறை வனத்துக்குள் மீண்டும் விட்டது.

இது தமிழக அரசு இன்று (ஆக. 03) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"ரிவால்டோ என உள்ளூர் மக்களால் குறிப்பிடப்பட்ட இந்த யானை சுமார் 35 முதல் 40 வயதுடைய ஒரு காட்டு யானை ஆகும். காட்டு யானையாக இருப்பினும், பல ஆண்டுகளாக மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்தது மட்டுமின்றி, அடிக்கடி மக்களின் வசிப்பிடப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு, அங்கேயே சுற்றித் திரிந்து வந்தது.

தங்கள் பகுதியில் காட்டுயானை சுற்றித் திரிவது சில உள்ளூர்வாசிகளுக்கு அச்சத்தையும் நெருடலையும் ஏற்படுத்தி இருந்ததால், வனத்துறையினர் 05.05.2021 அன்று இந்த யானையைப் பிடித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காட்டில் ஒரு மரக்கூண்டில் அடைத்து வைத்தனர்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையிலான குழு இந்நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. இக்குழுவில் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் மற்றும் வனத்துறையின் உயர் அலுவலர்களும் இடம் பெற்றிருந்தனர்.

தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, இக்குழுவானது ரிவால்டோ யானையை வனத்துக்கு மீள அனுப்பி மறுவாழ்வளிக்க முடிவு செய்தது. தமிழகத்தில் ஒரு பிடிபட்ட காட்டு யானையை மீண்டும் வனத்துக்குத் திரும்ப அனுப்பி மறுவாழ்வளிப்பது இதுவே முதல் முறையாகும்.

இக்குழு கடந்த 25 நாட்களாக இதற்கென மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, சுமார் கடந்த 48 மணி நேரத்தில் சிறப்பான முறையில் முன் ஏற்பாடுகளைச் செயல்படுத்தி இந்நடவடிக்கையை முடித்துள்ளது. இந்த யானை வனப்பகுதியில் விடத் தெரிவு செய்துள்ள இடம் அதற்கு மிக உகந்ததும், நல்ல தீவன உணவுகள் கிடைக்கக் கூடியதுமான செழிப்பான வனப்பகுதி ஆகும். மேலும், இப்பணியில் ரிவால்டோ யானைக்கோ அல்லது இப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவுக்கோ எவ்விதக் காயமுமின்றி, முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப் பகுதிக்கு ரிவால்டோ கொண்டு செல்லப்பட்டது.

இப்பணி, அரசின் முதன்மைச் செயலாளர், தலைமை வன உயிரினக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தமிழக வனத்துறை உயர் அலுவலர்களைக் கொண்ட குழு, 5 சிறப்பு கால்நடை மருத்துவர்கள், உலக வன உயிரின நிதியம், அண்டை மாநில வன உயிரின நிபுணர்கள் மற்றும் உள்ளூர் மாவூத்துகள் ஆகியோர் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கையாகும்.

மேலும், ரிவால்டோ யானையின் நடமாட்டங்களை நேரடியாக செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் வகையில், இதற்கென ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேடியோ கழுத்துப்பட்டை ஒன்று அதற்கு அணிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி யானையின் இருப்பிடம் குறித்த தகவல்களைத் துல்லியமாக வழங்கும்.

யானை விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், கிடைத்த கண்காணிப்பு விவரங்களைச் சோதித்தபோது, ரிவால்டோவின் அசைவுகளை ஒவ்வொரு மணி நேரமும் கண்காணிக்க இயலும் என்பதும், அக்கருவி நன்றாகச் செயல்படுவதும் தெரியவந்தது. ரிவால்டோ யானை தானாகவே உணவு உண்பது மட்டுமின்றி முக்கியப் பகுதியில் முற்றிலும் இயல்பான நடத்தையுடன் நன்றாக இருந்து வருகிறது.

வனத்தினுள் நெடுந்தொலைவு வரை தனது புதிய வாழ்விடத்துக்குச் செல்ல உதவுவதும், ரேடியோ கழுத்துப்பட்டை மூலம் இருப்பிடத் தகவல்களைக் கண்காணிப்பதும், யானையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். அதே நேரத்தில், தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தின் வாயிலாக அதன் நடமாட்டங்கள் பதிவு செய்யப்படுவதால், மனித - யானை மோதல் உரிய நேரத்தில் தவிர்க்கப்படுகிறது.

மனித நடவடிக்கைகளால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வன விலங்குகள் அதன் இயற்கைச் சூழலில் மீளப் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சிறப்பான முன்னுதாரணமாக இந்நடவடிக்கை அமையும். அதே சமயத்தில் மனித - வன உயிரின மோதலைத் தவிர்த்து, மனித உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்துள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE