மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்; விவசாயிகளின் துயர் துடைத்திடுக: ஈபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல் நடத்துவதைத் தடுத்து, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''மரவள்ளிக் கிழங்கு என்றாலே நினைவுக்கு வருவது ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு எனப்படும் ஸ்டார்ச்தான். இது, தமிழ்நாடு மட்டுமல்லாது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் போன்ற அனைத்து மாநிலங்களிலும், பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மரவள்ளிக் கிழங்கு பயிரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு வருகின்றனர்.

மரவள்ளிக் கிழங்கு பயிரினைப் பயிரிடும் விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என்று சுமார் 75,000 பேர் இதன்மூலம் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர். இந்த மரவள்ளிக் கிழங்கினை நம்பி, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 470 ஆலைகளும், இவ்வாலைகள் மூலம் சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச், சேலம் சேகோ சர்வ் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு பயிரின் முக்கிய எதிரி மாவுப் பூச்சி ஆகும். தற்போது மாவுப் பூச்சியின் தாக்குதலால் மரவள்ளிக் கிழங்கு பயிர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி அதன் உற்பத்தி குறைந்து, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்ற ஆண்டு மாவுப் பூச்சியின் தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, அதிமுக அரசு உடனடியாக அதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனால் அரசு செலவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்ட நிலங்களில் மருந்து தெளித்து மரவள்ளிக் கிழங்கு பயிர் காப்பாற்றப்பட்டது. விவசாயிகளும் நஷ்டத்தில் இருந்து மீண்டனர்.

பயிர் மட்டுமல்ல, விவசாயிகள் பயிரிட்ட மக்காச் சோளம் போன்ற பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படைந்துள்ளது என்று அருகிலுள்ள வேளாண் அதிகாரிகளிடம் தெரிவித்த உடனேயே, அப்பயிர்களைக் காப்பாற்ற, வேளாண் துறை மூலம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேண்டிய நிதியினை ஒதுக்கி மருந்து தெளித்து, விவசாயிகளைப் பயிரிழப்பில் இருந்து காப்பாற்றி உள்ளது.

உதாரணமாக, அமெரிக்கன் படைப் புழு பாதிப்பில் இருந்து, மக்காச்சோளப் பயிரினைக் காப்பாற்ற ஆரம்பக் கட்டத்திலேயே நிதி ஒதுக்கி மருந்துகள் தெளித்து, மக்காச் சோளம் பயிரிட்ட அனைத்து விவசாயிகளின் வயிற்றிலும் பால் வார்த்தது அதிமுக அரசு.

தற்போது, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர், மாவுப் பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக இம்மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளை இப்பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பி, தேவையான நிதியினை ஒதுக்கி பூச்சி மருந்து தெளித்து, மாவுப் பூச்சி பாதிப்பில் இருந்து மரவள்ளிக் கிழங்கு பயிரிட்ட விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்